வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
மாலை நேரம். வானம் மெல்ல கருக்கத் தொடங்கியது. சென்னை மெரினாவில் கடல் அலையின் சீற்றம் மட்டும் சற்றே அதிகமாக இருந்தது. சுற்றியிருந்த சுற்றுலாப் பயணிகளின் ஆரவாரம், மீன் உணவு வகைகளின் வாசம், கடல் அலைகளின் சத்தம் என அந்தச் சூழல் ஒருவித உற்சாகத்தைக் கொடுத்தது.
அப்போது சிறிது தூரத்தில், நாலைந்து சிறுவர்கள் வலைகளில் பிடித்த மீன்களைப் பிரித்து, விற்பனைக்காக எடுத்துக்கொண்டு இருந்தார்கள். நான்கு பேரும் பள்ளிப் பருவத்து நண்பர்கள் போலத் தெரிந்தார்கள். ஒருவரை ஒருவர் கிண்டல் கேலி செய்தவாறே சிரித்துக்கொண்டு இருந்த அந்த இளங்கூட்டத்தைப் பார்க்கவே ஆர்வமாக இருந்தது.

அருகில் சென்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பேசத் தொடங்கினேன்.
அதில் அஷ்வின் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு சிறுவனுக்கு வயது 17. அவன் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, பதினோராம் வகுப்புக்குச் செல்லவில்லை என்று சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அவனுக்குப் பள்ளிப் புத்தகத்தைவிட மீன் வலைகள்தான் நெருக்கமாக இருக்கின்றன எனப் புரிந்தது. கூட இருந்த மற்ற மூவரின் நிலையும் அதுவே. அவர்களின் மீன் பிடிக்கும் அனுபவத்தைப் பற்றி கேட்டபடியே, அவர்களின் வாழ்க்கைக் கதையையும் கேட்கத் தொடங்கினேன்.
அஷ்வின் கண்களில் லேசான ஈரம் படர்ந்தது. “எனக்கு மீன் பிடிக்கும் ஆர்வம் வர முதல் காரணமே என் அப்பாதான். அவர்தான் என் முதல் ஹீரோ. ஆனா, சமீபத்துல நான் அப்பாவை இழந்துட்டேன்… அதுக்கப்புறம் என் அம்மா வீட்டு வேலை செய்து எங்களைப் பார்த்துகிறார். அண்ணன் கல்லூரியில படிக்கிறான்.
எனக்குப் படிப்பில் ஆர்வம் போயிடுச்சு. ஆரம்பத்தில் நண்பர்களுடன் எப்போதாவது கடலுக்குப் போனேன். அதுல ஆர்வம் வந்ததால், இப்போ தினமும் காலையில போயிட்டு மதியம் கரைக்குத் திரும்பிடுவேன்.

சிக்கிய மீன்களைப் பிரித்து, சின்னச் சின்னக் கூடையில வெச்சுச் சாலையில விற்போம். அதுல வரும் வருமானத்துல படகிற்கான பங்கை வெச்சுட்டு, மீதியை நாங்க பிரிச்சுக்குவோம்.
என் அம்மா காலையில் வீட்டு வேலை பார்த்துட்டு, சாயங்காலம் மீன் உணவுக்கடை வைத்தும் வருமானம் ஈட்டுகிறார். என்னுடைய இந்த வருமானத்துல என் சின்னச் சின்னத் தேவைகளைப் பூர்த்தி செஞ்சுட்டு, மீதியை அம்மா கிட்ட கொடுத்துடுவேன்” என்றான்.
அரசாங்கம் கொடுக்கும் அடிப்படை வசதிகள் பல இருந்தும், ஏன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை என்று அஷ்வினிடம் கேட்டேன். அவன் சொன்ன பதில் என்னை அப்படியே திகைக்க வைத்தது.
“எங்க அம்மா அன்றைக்கே சொல்லிட்டாங்க… ‘படிக்காதடா… படிச்ச எல்லா இடத்திலும் நீ தெரியுவ’ன்னு. அதனால எனக்கும் ஆர்வம் வரலை” என்றான்.
பக்கத்தில் இருந்த இன்னொரு சிறுவன், “அக்கா, அவன் கிட்ட இதெல்லாம் சொல்லாதீங்க… அவன் கிட்ட சொல்றது நாய்க்கிட்ட சொல்ற மாதிரி!” என்று கிண்டலாகச் சொன்னான். இவ்வளவு இளவயதில், இவ்வளவு நல்ல வாய்ப்புகள் இருந்தும் எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கிறார்களே என்று கவலை வந்தது.

அந்தச் சமயத்தில் நான் சமீபத்தில் படித்த சில தரவுகளும் நினைவில் வந்தன.
BOBP-REP அறிக்கையின்படி, மீனவர் சமூகம் பொதுவாகக் குறைவான வருமானத்துடனும், அதிக கடனுடனும் (Indebtedness) இருப்பதாகக் கூறுகிறது. குடும்ப வருமானத்தை அதிகரிக்க மீன்பிடித் தொழிலில் உதவ வேண்டியிருப்பதால், மீனவர் குழந்தைகள் பள்ளியில் படிப்பைத் தொடர முடியாமல் போகும் ஆபத்தை சந்திக்கிறார்கள்.
கல்வி உதவித்தொகை, பெற்றோருக்கான விழிப்புணர்வுப் பணிகள் ஆகியவை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை இந்தச் சிறுவர்கள் மூலம் நான் உணர்ந்தேன்.
அந்த மூவரும் இன்னும் கடலைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் ஒருநாள், அந்தக் கடல் கதவாக மாறி, அவர்களின் வாழ்க்கைப் புத்தகங்கள் திறக்கும் நாளையும் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை, ‘ஸ்டைலு ஸ்டைலு தான் அது சூப்பர் ஸ்டைலு தான்’ என்று இப்போதுவரை ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் கலைஞன் நடிகர் ரஜினிகாந்த்! அவரின் திரைப் பயணத்தை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாளையொட்டி `மை விகடன்’ ரஜினிபற்றிய சிறப்பு கட்டுரைகளை பகிர உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் குறித்த உங்கள் பொக்கிஷமான நினைவுகளை எங்களுடன் பகிருங்கள்!
கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: