வெற்றிமாறன் – சிலம்பரசன் கூட்டணியின் ‘அரசன்’ படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி வைரலானது நினைவிருக்கலாம். அதனைத் தொடர்ந்து, அதன் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் இன்று கோவில்பட்டியில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

‘அரசன்’ படத்தின் புரொமோ வீடியோ கடந்த அக்டோபரில் அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது. அதில் இளமையான சிம்பு, 45 வயது தோற்றத்தில் உள்ள சிம்பு என இரண்டு வித கெட்டப்களில் இருந்த சிலம்பரசனின் தோற்றம் வரவேற்பை அள்ளியது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். சமுத்திரகனி, கிஷோர் என ‘வடசென்னை’க்கான முகங்கள் தேர்வானார்கள். சமீபத்தில் மலேசியா சென்ற சிலம்பரசன், இன்னும் மூன்று நாட்களில் ‘அரசன்’ படப்பிடிப்பில் இணைவதை உறுதிப்படுத்தினார்.

அதன்படி நேற்று எளிமையான முறையில் படப்பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று (9ம் தேதி) படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. முன்னதாக வெற்றிமாறனும் அவரது யூனிட்டும் சில வாரங்களுக்கு முன்னரே கோவில்பட்டி பகுதிகளில் லொக்கேஷன்களை பார்த்துத் திரும்பினார்கள்.
அதைப்போல இளம் வயது சிலம்பரசனின் கேரக்டருகாக அவரிடம் 12 கிலோ வரை உடல் எடையை குறைக்கச் சொல்லியிருந்தார் வெற்றிமாறன். இதற்காக சிலம்பரசன், சில வாரங்களுக்கு முன்னரே துபாய் பறந்து படத்திற்கான தோற்றத்திற்கு வந்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளுக்கான சில டெக்னிக்குகளையும் அங்கே கற்றுத் திரும்பியிருக்கிறார்.

கோவில்பட்டியில் இன்று தொடங்கியிருக்கும் முதற்கட்ட படப்பிடிப்பு மூன்று வாரங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது. சிலம்பரசனின் ஒரு கேரக்டர் பெயர் மதுரை டைகர் என்று கேள்வி. மதுரையில் தொடங்கும் கதை, வட சென்னை வரை வருகிறது என்றும் சொல்கிறார்கள். விளையாட்டு வீரராக அவர் கேம் ஆடும் காட்சிகளுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தொடர்ந்து ஆக்ஷன் காட்சிகள் எடுக்கின்றனர். இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பில் தான் விஜய் சேதுபதி பங்கேற்பார் என்கிறார்கள். அங்கே இப்போது ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். வெற்றிமாறனின் கேமரா கண்ணான வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். தென்மாவட்டங்களில் சிலம்பரசனின் வருகை அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. அரசனை வரவேற்று போஸ்டர்களை கோவில்பட்டி பகுதிகளில் ஒட்டியிருக்கின்றனர். தொடர்ந்து வரும் நாட்களில் அந்தப் பகுதி ரசிகர்களைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார் சிலம்பரசன்.