Pragathi: "அதுல நீதான் நடிக்கணும்'னு பாலா சார் சொன்னாரு!" – பின்னணி பாடகி பிரகதி ஷேரிங்ஸ்

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 நினைவிருக்கிறதா!? அந்த சீசனை அத்தனை எளிதாக மறக்க முடியாது.

ஆஜித், பிரகதி எனத் திறமையாள பாடகர்கள் பலரும் பங்கேற்ற சீசன் அது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குப் பிறகு வெகு சீக்கிரமாகவே பிரகதி பின்னணி பாடகியாக உருவெடுத்து விட்டார்.

Pragathi Interview
Pragathi Interview

‘பரதேசி’, ‘வணக்கம் சென்னை’ என அடுத்தடுத்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார். அதுமட்டுமல்ல, இப்போது அமெரிக்காவில் வசிக்கும் பிரகதியை சில ஹாலிவுட் சீரிஸ்களிலும் பார்க்க முடிகிறது.

சுயாதீன பாடகர் ஸ்டீபன் செக்கரியாவுடன் இணைந்து தற்போது சுயாதீன பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார். அதற்காக வாழ்த்துகள் தெரிவித்து அவரிடம் பேசினோம்.

நீங்களும் ஸ்டீபன் செக்கரியாவும் இணைந்து பாடியிருக்கும் ‘கனா கண்டேன்’ சுயாதீன பாடல் வந்திருக்கு. அவர்கூட இரண்டாவது முறையாக இணைஞ்சு வேலை செய்வது பற்றி…

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி செய்த பாடல் இது. இந்தப் பாடல் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இதுக்கு முன்னாடி 2016-ல வேறொரு சுயாதீன பாடலுக்காக இணைஞ்சிருந்தோம். அந்தப் பாடல் எங்களுடைய கரியருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. அந்தப் பாடலோட ரிலீஸுக்குப் பிறகு நாங்க அந்தப் பாடலை இதுவரை ஒரேயொரு மேடையிலதான் அதை பாடியிருக்கேன். இந்தப் பாடலுக்கு வழக்கமான ஸ்வீட் டோன் இல்லாமல் வேறொரு விஷயத்தை எதிர்பார்த்திருக்கார். அப்போதான் இந்தப் பாடலுக்குள்ள நான் வந்தேன்.

Pragathi Interview
Pragathi Interview

கொரோனாவுக்குப் பிறகு சுயாதீன இசைக்கான வரவேற்பு அதிகமாகியிருக்குனு சொல்லலாம். இப்போ, ஒரு சுயாதீன பாடலை செய்து, அதை மக்களுக்குப் பிடிக்க வைக்கிறது எவ்வளவு சவாலான காரியம்?

சொல்லப்போனால், புதுசாக எதாவது நம்ம செய்யணும். அதுதான் இருக்கிற ஒரே சவால். இன்னைக்கு தமிழ்ல சுயாதீன கலைஞராக வளர்றதுக்கு ப்ளாட்ஃபார்ம் பெருசாகிடுச்சு. முன்னாடியெல்லாம் நம்முடைய குரல் மட்டும்தான் நம்முடைய அடையாளமாக இருக்கும். ஆனால், இன்னைக்கு அப்படியான சூழல் கிடையாது. இப்போ வைரல்னு சொல்லப்படுகிற விஷயத்துக்குப் பின்னாடி போகாமல் நல்ல ஒரு பாடல் செய்யணும். அதுதான் சவாலான விஷயமாகப் பார்க்கிறேன்.

இன்றைய தேதியில, அந்த வைரல் விஷயத்தை பின்தொடர்ந்து பாடல் செய்து அதை மக்களுக்கு பிடிக்க வைக்கணும்னு உங்களுக்கு கட்டாயமான சூழல் ஏற்படுதா?

இல்லை, எனக்கு அப்படி கிடையாது. சில மாதங்களுக்கு முன்னாடி என்னுடைய சுயாதீன பாடல் வந்தபோது பலரும் ‘இப்போ டான்ஸ் நம்பர்தான் ஹிட் ஆகும். ஹூக் ஸ்டெப் வைங்க’னு சொன்னாங்க. ஆனா, நம்முடைய கதைகளை அதன் வழியில இல்லாமல் நேர்த்தியாகச் சொன்னாலே மக்களுக்கு நிச்சயமாக அது பிடிக்கும். மக்களுக்கு வைரல் வடிவத்துல பண்ற பாடல்கள் பிடிச்சிருக்குனு அதை செய்தால் மூணு மாசத்துக்குப் பிறகு அந்தப் பாட்டை யாரும் கேட்க மாட்டாங்க. எனக்கு இப்படியான வைரல் வழியை தேர்வு செய்யலாம்னு தோணுச்சுனா நான் தவறான வழியில போவதாக அர்த்தம்.

Pragathi - Director Bala
Pragathi – Director Bala

இயக்குநர் பாலா இயக்கும் படத்தில் நீங்க கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல் வந்ததே! பாடகராக நீங்கள் எங்களுக்கு பரிச்சயம். உங்களுக்குள் நடிகரை அவர் எப்படி கண்டுபிடித்தார்?

நிறைய நல்ல திறமையாளர்களை அவர் அறிமுகப்படுத்தியிருக்காரு. ‘பரதேசி’ திரைப்படத்துல நான் மூணு பாடல்கள் பாடியிருந்தேன். அப்போ அவர்கூட க்ளோஸ் ஆகிட்டேன். அவர் எனக்கு காட்ஃபாதர் மாதிரி. ஒரு நாள் அவர் கதை எழுதிட்டு இருக்கும்போது, ‘நான் இந்தக் கதையைப் படமாக எடுத்தா, அதுல நீதான் நடிக்கணும்’னு சொன்னாரு. பாலா சார் மாதிரியான இயக்குநர் என்மேல நம்பிக்கை வச்சு இப்படியான வார்த்தைகள் சொல்வது ரொம்ப பெரிய விஷயம். அவர் எனக்குள்ள இருக்கும் நடிகரை எப்படி கண்டுபிடிச்சார்னு தெரியல. அவர் சொன்னதுக்குப் பிறகுதான் நானும் ஆக்டிங் ஸ்கூல் சேர்ந்தேன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.