ICC T20 World Cup 2026, Axar Patel vs Washington Sundar: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற நிலையில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 அணிகள் தொடரில் இருந்து குரூப் சுற்றோடு வெளியேறி உள்ளன.
Add Zee News as a Preferred Source
பிப். 21ஆம் தேதி முதல் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. 8 அணிகள் இந்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. இந்தியா, ஜிம்பாப்வே, மேற்கு இந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா அணிகள் ஒரு பிரிவிலும்; பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மற்றொரு பிரிவிலும் விளையாட உள்ளன. ஒரு அணி தனது பிரிவில் இருக்கும் மற்ற 3 அணிகளுடன் தலா 1 போட்டியை விளையாடும். எனவே, சூப்பர் 8 சுற்றில் ஒரு அணி மூன்று போட்டிகளில் விளையாடும்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா
இந்திய அணியை பொருத்தவரை, சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வரும் பிப். 22ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்க அணி நடப்பு தொடரில் இங்கு மூன்று போட்டிகளில் விளையாடியிருக்கிறது. கனடா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகளை இங்கு தென்னாப்பிரிக்கா வீழ்த்தியிருக்கிறது. பேட்டிங்கில் குவின்டன் டி காக், எய்டன் மார்க்ரம், ரயான் ரிக்கில்டன் உள்ளிட்டோர் பேட்டிங்கிலும்; லுங்கி இங்கிடி, யான்சன் போன்றோர் பந்துவீச்சிலும் மிரட்டி வருகின்றனர்.
இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகள் கடந்த டிசம்பரில் இதே மைதானத்தில்தான் டி20ஐ போட்டியில் விளையாடியிருந்தது. அந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி கடைசியாக இங்கு நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது, 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணியின் பேட்டிங் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சற்று திணறி வருகிறது என்றாலும், இந்திய அணியின் பந்துவீச்சு ஓரளவு சிறப்பாகவே இருந்து வருகிறது.
ஒரே ஒரு ஸ்பாட் மட்டுமே பிரச்னை
இருப்பினும், கடந்த 4 போட்டிகளிலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டன. பேட்டிங்கில் பெரியளவில் மாற்றங்கள் இருக்காது. அபிஷேக் சர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படும். பந்துவீச்சிலும் அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கும் இடம் உறுதி எனலாம். மாற்றத்திற்குரிய ஒரு இடம் நம்பர் 8 ஸ்பாட்தான். அதில் முதல் மூன்று போட்டிகளில் அக்சர் பட்டேலும், கடந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தரும் விளையாடினர். இவருமே சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள், நம்பர் 8இல் பேட்டிங் செய்யக்கூடியவர்கள், பவர்பிளேவில் பந்துவீசக்கூடியவர்கள். ஆனால், அக்சர் பட்டேல் இடதுகை ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர், வாஷிங்டன் சுந்தர் ஆப் ஸ்பின்னர் ஆவார்.
அக்சர் பட்டேல் vs வாஷிங்டன் சுந்தர்
அந்த வகையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவாரா அல்லது அக்சர் பட்டேல் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் இருவரின் டி20ஐ செயல்பாடுகளை இங்கு காணலாம்.
வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஓடிஐ தொடரில் காயம் ஏற்பட்டதால், டி20ஐ தொடரை தவறவிட்டார். மேலும், அவர் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரிலும் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். டிசம்பரில் நடந்த தென்னாப்பிரிக்க டி20ஐ தொடரிலும் வாஷிங்டன் சுந்தர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். மேலும், இவர் பவர்பிளேவில் பந்துவீசினாலும் கூட பெரியளவில் விக்கெட் வீழ்த்துவதில்லை. ரன்களையும் வாரி வழங்குகிறார். தென்னாப்பிரிக்காவின் டாப் 8 பேட்டிங்கில் மூன்று இடதுகை பேட்டர்கள் மட்டுமே உள்ளனர் என்பதால் வாஷிங்டன் சுந்தரின் தேவையும் குறைகிறது.
அக்சர் பட்டேல்
அக்சர் பட்டேலை பொருத்தவரை, தற்போதைய இந்திய அணியின் துணை கேப்டன் ஆவார். டிசம்பரில் நடந்த தென்னாப்பிரிக்க தொடர், ஜனவரியில் நடந்த நியூசிலாந்து தொடர், நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் என தொடர்ச்சியாக அக்சர் பட்டேல் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டை வீழ்த்தி வருகிறார். பேட்டிங்கிலும் அவ்வப்போது சிறப்பாக விளையாடுகிறார். ஆனால், அதிக வலதுகை பேட்டர்களை தென்னாப்பிரிக்கா கொண்டுள்ளதால் அக்சர் பட்டேல் பெரியளவில் உதவுவார்.
அர்ஷ்தீப் சிங் விளையாடினால்…
இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் தீப்தாஸ் குப்தா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசுகையில், “அர்ஷ்தீப் விளையாடினால் அக்சர் பட்டேலை சேர்க்க வேண்டும். ஒருவேளை விளையாடாவிட்டால் வாஷிங்டன் சுந்தரை எடுக்கலாம். வாஷிங்டன் தொடர்ச்சியாக பவர்பிளேவில் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடையே தேர்வு செய்ய வேறு ஒன்றும் இல்லை” என்றார். மேலும் அர்ஷ்தீப் சிங் விளையாடும்பட்சத்தில், ஜஸ்பிரித் பும்ரா மீது பெரியளவில் அழுத்தம் இருக்காது. எனவே, அர்ஷ்தீப் – அக்சர் விளையாடவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
மேலும் படிக்க | இந்திய அணியின் பெரிய வீக்னஸ்… தென்னாப்பிரிக்காவின் ராஜ தந்திரம் – கம்முனு இருக்கும் கம்பீர்!
மேலும் படிக்க | IND vs SA: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சூப்பர் 8! இந்திய அணியில் 2 மாற்றம்?
மேலும் படிக்க | சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றாலும்.. இந்திய அணியில் உள்ள முக்கிய பிரச்சனை!
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More