`அரசால் மூடப்பட்ட மருத்துவமனைக்காக IMA போராடுவதா?’ – அடங்காத ஈரோடு கருமுட்டை விவகாரம்!

ஈரோட்டில், 16 வயது சிறுமியிடமிருந்து, சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம் அம்பலமாகி பெரும் அதிர்வை உண்டாக்கியது. அதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளை இழுத்து மூடி சீல் வைத்து, அதிரடி காட்டியது தமிழக அரசு.

சீல் வைக்கப்பட்ட சுதா மருத்துவமனை

அதையடுத்து, ‘தமிழக அரசின் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ எனக்கூறி, மூடப்பட்ட மருத்துவமனைகளில் ஒன்றான சுதா மருத்துவமனை நிர்வாகம், நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வாதாடி, மருத்துவமனையை மீண்டும் திறந்தது. ஆனால் தமிழக அரசோ, ‘நீதிமன்றம் பிறப்பித்த தடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என மேல்முறையீடு செய்து, சுதா மருத்துவமனையின் கதவுகளை மறுபடியும் இழுத்துப் பூட்டி சீல் வைத்திருக்கிறது.

இந்த உத்தரவால், ‘மருத்துவமனையை மூடி எங்களுடைய வயிற்றில் அடிக்காதீர்கள். எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும்’ என சுதா மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.

இந்நிலையில் சுதா மருத்துவமனைக்கு ஆதரவாக, இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளை சார்பில், கடந்த சனிக்கிழமை ஈரோட்டில் உள்ள 250 தனியார் மருத்துவமனைகளும் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.

தனியார் மருத்துவமனை முழு அடைப்பு போராட்டம்

‘மருத்துவமனையை சீல் வைப்பதோடு எல்லா பிரச்னையும் முடிந்துவிடப் போவதில்லை. அரசாங்கத்தின் பக்கமும் நிறைய தவறுகள் இருக்கின்றன. இந்த அதிரடி நடவடிக்கை தனியார் மருத்துவமனைகளை அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது’ என ஒரு தரப்பினர் சொல்ல, மற்றொரு தரப்பினரோ, ‘குற்றச்சாட்டுக்கு ஆளான மருத்துவமனைக்கு ஆதரவாக, அனைத்து தனியார் மருத்துவமனைகளும் போராட்டத்தில் ஈடுபட்டது சரியான அணுகுமுறை கிடையாது. உயிர் காக்கும் மருத்துவமனைகள் இப்படி நடந்துகொள்வது தவறான முன்னுதாரணம்’ என்கின்றனர்.

ஈரோட்டில் மருத்துவமனைகள் நடத்திய போராட்டம் குறித்து, இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் (தேர்வு) கே.எம்.அபுல்ஹசன் அவர்களிடம் பேசினோம்.

“எதிர்ப்பைக் காட்டுவதற்கு வேலைநிறுத்தம் என்பது ஜனநாயக மரபு தான். மருத்துவமனையை மூடுவது என்பது ஒரு துரதிஷ்டசமான விஷயம். இந்த நடவடிக்கையானது செய்த தவற்றை விட, அதிகபட்சமான தண்டனையை கொடுத்ததைப் போல இருக்கிறது. அதற்காகத்தான் எங்களுடைய எதிர்ப்பைக் காட்டினோம். மற்றபடி சுதா மருத்துவமனை மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்காக எதிர்ப்பு காட்டவில்லை. தவற்றுக்கு உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும். பிற்காலத்தில் இதுவொரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் வேலைநிறுத்தம் செய்தோம். தனியார் மருத்துவமனைகளை பாதுகாக்கக்கூடிய ஒரு நடவடிக்கையாகத்தான் அதனைச் செய்தோம்.

சம்பந்தப்பட்ட சிறுமிக்கு நடந்தது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம். அப்படியான ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கக்கூடாது. நாம் அதை நியாயப்படுத்தவும் இல்லை. அதே வேளையில், இருதய மாரடைப்பு சிகிச்சையில் துரிதமாக, சிறப்பான சிகிச்சையைக் கொடுக்கும் ஒரு மருத்துவமனையாக, ஈரோடு சுதா மருத்துவமனை இருந்து வந்தது. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சாமானிய மக்களும் இம்மருத்துவமனையில் ஆஞ்சியோ பிளாஸ்டி உள்ளிட்ட சிகிச்சைகளை பெற்று வந்தனர். அதுபோக குழந்தைகள் சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை போன்ற பல்துறை சிகிச்சைகளும் இந்த மருத்துவமனையில் சிறப்பாக கொடுக்கப்பட்டு வந்தன.

அபுல்ஹசன்

குறிப்பாக, கொரோனாவின் ஆரம்பக்கட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சையளிக்கத் தயங்கிய காலத்தில், ஈரோட்டில் தனியாக ஒரு பில்டிங்கை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கி சிகிச்சை கொடுத்தது சுதா மருத்துவமனை. அப்படியிருக்க இன்றைக்கு மருத்துவமனையை மூடும்போது, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் என பல நூறு பேர் வேலை இழந்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி நிற்கின்றனர்.

தவறு நடந்ததாகச் சொல்லப்படும் செயற்கை கருத்தரித்தல் மையத்தை மட்டும் மூடிவிட்டு, சுதா மருத்துவமனையில் உள்ள மற்ற துறைகளை செயல்பட விட்டிருக்கலாம் என்பதே எங்களுடைய கருத்து. அரசாங்கம் ஒரு குழுவை அமைத்து, செயற்கை கருத்தரித்தல் மையங்களை கண்காணிக்கலாம். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை இங்கு யாருமே தடுக்கவில்லை. பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் இன்றைக்கு மல்டி ஸ்பெஷாலிட்டி எனப்படும் பலதுறை மருத்துவமனைகளாகத் தான் இருக்கின்றன. ஆக, ஒரு மருத்துவர் தவறு செய்யும்போது ஒட்டுமொத்த மருத்துவமனையையே மூடுவது என்பது, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு பெரும் பயத்தை உண்டாக்கியிருக்கிறது. எனவே இது சம்பந்தமாக சுகாதாரத்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேச இருக்கிறோம். மருத்துவமனை தரப்பிலும் கோரிக்கை விடுத்து அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்” என்றார்.

வழக்கறிஞர் மற்றும் தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணைய முன்னாள் உறுப்பினர் ஜெயந்திராணி, “ ‘இன்னைக்கு ஒருநாள் நான் ஹாஸ்பிட்டலை மூடுனா, அதனால ஏற்படுகின்ற நஷ்டம் எனக்கு பெரிய விஷயம் இல்லை’ என்கின்ற நினைப்பில் தான் மருத்துவமனைகள் போராட்டத்தை நடத்தியிருக்கின்றன. அவர்களை நம்பி வரக்கூடிய நோயாளிகளைப் பற்றி அவர்கள் கருதவே இல்லை என்பது தான் உண்மை. ‘என்னோட தொழிலையும், என்னோட லாபத்தையும் நான் நிலை நிறுத்தணும். அதனால நான் ஒருநாள் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை’ என்கின்ற கண்ணோட்டம் தானே இதுல மேலோங்கி நிக்கிது.

ஜெயந்திராணி

ஒரு குழந்தையிடமிருந்து கருமுட்டையை எடுத்து, சுயலாபத்திற்காக அந்த தனியார் மருத்துவமனை சட்டவிரோதமாக விற்பனை செய்திருப்பதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, அரசாங்கம் ஒரு நடவடிக்கை எடுத்துருக்கு. அப்படியிருக்க, சட்டவிரோதமான ஒரு செயலுக்கு மற்ற மருத்துவமனைகள் எப்படி ஜனநாயக ரீதியாகப் போராட முடியும். சட்டவிரோதமாக நீங்க ஒரு செயலை செய்யலைன்னா, போராட்டம் செய்ய வேண்டிய அவசியமே இல்லையே. சட்டவிரோத செயல்களுக்கு எல்லாம் நீங்க ஜனநாயக ரீதியாகப் போராடினீர்கள் என்றால், அதுவும் சட்டவிரோதமான போராட்டம் தான்” என்றார்.

தவறு நடந்திருக்கிறது என்றுதான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. தவறு நடந்திருக்கிறது என்பதை சங்கமும் ஒப்புக்கொள்கிறது. அப்படியிருக்கும்போது, தவறு இழைத்த மருத்துவமனையை, சங்கத்திலிருந்தே நீக்கும் நடவடிக்கையைத்தான் முதலில் சங்கம் எடுத்திருக்க வேண்டும். அப்படி அந்த மருத்துவமனை தவறு செய்யவில்லை என்று நினைத்தால், சட்டப்பூர்வமாக அதை எதிர்கொள்ள துணை நின்றிருக்க வேண்டும். அதைவிடுத்து, ஏதோ மளிகைக்கடைகளை மூடுவதைப்போல மருத்துவமனைகளை ஒருநாள் முழுக்க மூடியிருப்பது எந்த அளவுக்கு சரி? இதை அரசாங்கமும் வேடிக்கை பார்த்தது எப்படி? என்கிற கேள்விகள் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.