கொடூர் கிராமத்தில் சிட்கோ அமைவதையொட்டி மதுராந்தகம் – கூவத்தூர் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

செய்யூர்: பவுஞ்சூர் அடுத்த கொடூர் கிராமத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கும் பணி துவங்கியுள்ள நிலையில் மதுராந்தகம் – கூவத்தூர் செல்லும் நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்துள்ளது கொடூர் கிராமம். இந்த கிராம பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ரூ. 45.94 கோடி மதிப்பீட்டில் சிக்கோ தொழிற்பேட்டை அமைப்பதற்கான பணி கடந்த மாதம் துவங்கியது. இங்கு தொழிற்பேட்டை அமைப்பதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால் கொடூர் கிராமத்தை சுற்றி 30 கி.மீ., தொலைவில் உள்ள கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டு தொழிற்சாலைகளுக்கு வேலை செல்பவர்கள் கொடூர் பகுதியில் புதிதாக உருவாக்கப்படும் தொழிற்சாலைகளில் பணிபுரிய ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், கருங்குழி, வேடந்தாங்கல், படாளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகள் புதிய தொழிற்பேட்டையில் சேருவதற்கான் அதிக வாய்ப்புள்ளது.

இவ்வாறு பணியாளர்களை அழைத்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் மதுராந்தகம், முதுகரை, பவுஞ்சூர் வழியாக தான் செல்ல வேண்டும். அந்நேரங்களில் மதுராந்தகம் – கூவத்தூர் சாலை அதிக வாகனங்கள் சென்று வரும் நிலை ஏற்படும். தற்போது மதுராந்தகம் – கூவத்தூர் சாலை இருவழி சாலையாக உள்ளது. இருப்பினும் அவ்வப்போது விபத்துகள் நேரிடுவதோடு பவுஞ்சூர் பஜார் பகுதியில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலை இருக்க தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டு தொழிற்சாலை வாகனங்கள் அதிகளவில் விடப்பட்டால் அதிகளவில் விபத்துகளும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே இந்நிலை வருவதற்கு முன் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி மதுராந்தகம் – கூவத்தூர் செல்லும் நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.