வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
பனைக்கு கற்பக விருட்சம் என்ற பெயர் உண்டு. 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் 5 கோடிக்கும் மேலான பனை மரங்கள் இருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் கணக்கிட முடியாத அளவுக்கு, பனை மரங்கள் செங்கல் சூளைக்கும், வீட்டுமனைகள் கட்டுவதற்கும் வெட்டப்பட்டதால், இப்போது அழிவின் விளிம்பில் நிற்கிறது பனைமரம்.

தொடர்ந்து மரங்கள் வெட்டப்படுவதாலும், அழிவை ஈடுகட்டும் வகையில் வளர்க்கப்படாததாலும், பனையைப் பாதுகாக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை பனை மரத்தை அரிய வகை மரமாக அறிவித்துள்ளது. தமிழக அரசும் பனை மரத்தை வெட்டக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை தவிர்க்க முடியாத சூழலில், மரத்தை வெட்டியே ஆகவேண்டிய சூழல் ஏற்பட்டால், மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற வேண்டும் என அறிவித்துள்ளது. இதை மீறுபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளது.
”இவை எல்லாம் ஒரு வகையில் வரவேற்க தக்க நடவடிக்கை என்றாலும், இருக்கின்ற மரங்களை பாதுகாப்பதில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றது” என்கிறார் நெல்லை சீவலப்பேரியை சேர்ந்த பெரியவர் வேல்சாமி.
”நான் இங்கே சீவலப்பேரியில் சுடலை மாடன் கோவில்கிட்ட இருக்கிற இந்த மரங்களை ரூ.17 ஆயிரத்திற்கு குத்தகைக்கு எடுத்திருக்கிறேன். ஒரு வருஷத்திற்கு இந்த பனைமரங்களில் இருந்து ஓலை, நுங்கு வெட்டிக் கிடலாம். பனம்பழம் பறிச்சிக்கிடலாம். பதனீர் இறக்கி விற்கலாம். மரத்தை வெட்டக்கூடாது என்பது மட்டுமே நிபந்தனை. ஆனால், இங்கிட்டு, நெல்லை, தென்காசி, சங்கரன்கோவில் பக்கம் எல்லாம், பனையேறிக அரிதாகிப் போனார்கள்.

இதனால் ஓலை வெட்ட யாரும் வரவே மாட்டேன்கிறாங்க. முன்னமாதிரி யாரும் இப்ப பனையேறி பாலை சீவுவதில்லை. எனக்கும் இப்ப 80 வயசை தாண்டிட்டதால, பனை ஏற முடியலை. பதனீர் இறக்கனும்னா, கேரளாவில் இருந்து தான் ஆட்கள் வரனும். அதுவும்.
முதல்நாள் பதனீர் அவங்க விற்பான். மறு நாள் இறக்குகிற பதனீர் நமக்கு கொடுப்பான். 3-வது நாள் பதனீர் அவனுக்கு. 4-வது நாள் பதனீர் நமக்கு. அவன் எத்தனை பனை ஏறுவான், எவ்வளவு இறக்குவான்? என்பது நமக்கு தெரியாது. இதுல பல நடைமுறைச் சிக்கல் இருக்கு. காத்துல விழுகிற பனை ஓலைகளையும், பனம் பழங்களையும் எடுத்து வித்துகிட்டு இருக்கோம். இங்கே இருக்கிற சுடலைமாட சாமி கோவிலுக்கு வருபவர்கள், இந்த பனை ஓலை வாங்கி பொங்கல் வைப்பாக…” என்றார்.
சிறிதுநேரம் அண்ணாந்து பனை மரங்களை பார்த்த அவர், “எல்லா மரங்களிலும் ஓலைகளை மழிச்சு விட்டாத்தான், பனை மரங்கள் உயிர்ப்போடு இருக்கும். எனக்கு இப்போ 83 வயசு ஆயிடுச்சு என்னால மரம் ஏற முடியாது. பனைமரத்தை வெட்டக்கூடாதுன்னு அரசாங்கம் சட்டம் போட்டதெல்லாம் சரிதான். பனங்கொட்டைகள் நடுவதையும் வரவேற்கிறோம். ஆனா, இருக்கிற மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தா நல்லா இருக்கும்…!” என்றார். சரசரவென காற்றில் அசைந்தாடிய சருகு ஓலைகளும்.. அவரது பேச்சை ஆமோதித்தன..
–சி.அ.அய்யப்பன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.