தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அதிமுக எம்பி ரவீந்திரநாத் தோட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று மர்மமாக இறந்து கிடந்தது. சிறுத்தை இறந்தது தொடர்பாக எம்பி ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆட்டு கிடை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் மற்றும் தோட்ட மேலாளர் இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் சார்பாக ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தோட்ட உரிமையாளர் எம் பி ரவீந்திரநாத் குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கைது செய்யப்பட்ட ஆடு மேய்க்கும் தொழிலாளி அலெக்ஸ் பாண்டியன் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
தோட்ட உரிமையாளர்களான ரவீந்திரநாத் எம்.பி. உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்வதற்காக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் ரவீந்திரநாத் எம்.பி மீது விசாரணை நடத்த மக்களவை சபாநாயகருக்கு கடந்த வாரம் தேனி மாவட்ட வன அலுவலர் கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில் சிறுத்தை உயிரிழப்பு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, ரவீந்திரநாத் எம்.பிக்கு வனத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். இரண்டு வாரத்திற்குள் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளதாக தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தா தகவல் தெரிவித்துள்ளார்.