கமல் ஒரு மங்கி… ஜிபி முத்துவுக்கு எஸ்.வி.சேகர் ஆதரவு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. இதில் சாந்தி, ராபர்ட், மகேஸ்வரி, ரச்சிதா, அசல், ஆயிஷா, ஜனனி, நிவாஷினி, அமுதவாணன், மணிகண்டன், ஷிவின், குயின்சி, மைனா நந்தினி, ராம், தனலட்சுமி, ஏடிகே, அசீம், விக்ரமன், கதிர், ஷெரின் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்த பிக்பாஸ் அசல் – தனலட்சுமி சண்டை, அசீம் – ஆயிஷா சண்டை, விக்ரமன் – அசீம் சண்டை என போகப்போக களைகட்டியுள்ளது. இதில் யாரும் எதிர்பார்க்காதவிதமாக ஜிபி முத்து தன்னுடைய மகனை காண வேண்டுமென்று கூறி பிக்பாஸ் வீட்டிலிருந்து அனுப்பிவிடுங்கள் என கடந்த சில நாள்களாகவே கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் ஜிபி முத்துவை வைத்துதான் பிக்பாஸின் இந்த சீசனை ரசிகர்கள் அதிகம்பேர் பார்க்கிறார்கள் என்பதால் அவரை நிச்சயம் வெளியே அனுப்பமாட்டார்கள் என பரவலாக கருதப்பட்டது. ஆனால் நேற்று பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்த கமல் ஹாசன் ஜிபி முத்துவை தனியாக அழைத்து பேசினார். அப்போது, ரசிகர்கள் உங்களை அதிகம் விரும்புகிறார்கள். இந்த பிக்பாஸ் மூலம் நீங்கள் திரையில் மின்னலாம். புகழ் கிடைக்கும் என்று கூறினார். ஆனால் தனக்கு பணம், புகழ், பேரைவிட தன் குடும்பமும், தன் மகனும்தான் முக்கியம். எனவே என்னை அனுப்பிவிடுங்கள் என ஜிபி முத்து வலியுறுத்தினார்.

இதனால் வேறு வழியின்றி முத்துவின் விருப்பத்திற்கேற்ப பிக்பாஸ் வீட்டிலிருந்து அவர் அனுப்பிவைக்கப்பட்டார். இது ரசிகர்கள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் தன் குடும்பம்தான் முக்கியம் என்று சென்ற ஜிபி முத்துவை நிச்சயம் மதிக்க வேண்டுமென்றும் ஒருதரப்பினர் கூறிவருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தன் முகநூல் பக்கத்தில், “நீ சங்கியா என கேலி பேசப்பட்டவர், 100 நாள் வேலை வாய்ப்புத்திட்ட பணத்தைவிட, தன் மகன் மேல் வைத்திருக்கும் பாசமே மேல் என ஒரு நல்ல குடும்பத்தலைவனாக நிரூபித்து, கேலி பேசிய மங்கிக்கு முகத்தில் கரி பூசி நம் மனதில் உயர்ந்து  நிற்கின்றார்” என பதிவிட்டிருக்கிறார்.

முன்னதாக, கடந்த வாரம் ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவருடைய ரசிகர்கள் அவருக்கு எழுதிய கடிதங்கள் படித்து காண்பிக்கப்பட்டன. அப்போது ஒரு கடிதத்தில், “தலைவரே நீங்கள் பிக்பாஸ் வீட்டில் சிங்கியா, சொங்கியா, மங்கியா” என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இந்தக் கேள்வியை கேட்டதும் கமல் ஹாசன், ’ஒன்ன விட்டுட்டாங்கள்ள நானும் அதைத்தான் நினைச்சேன்’ என கூறினார். இதனையடுத்து, ஒன்றை விட்டுவிட்டார்கள் என்று கமல் சொன்னது ‘சங்கி’ என்பதைத்தான் என நெட்டிசன்கள் தெரிவித்து அந்த வீடியோவை அதிகம் பகிர்ந்தனர். தற்போது எஸ்.வி. சேகர் இவ்வாறு பதிவு செய்திருப்பதன் மூலம் கமல் ஹாசனைத்தான் அவர் மறைமுகமாக சாடியிருக்கிறாரோ என சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பி வருகின்றனர். பொதுவாக பாஜகவினரையும், இந்துத்துவா சிந்தனையுடையவர்களையும் சங்கிகள் என அழைப்பது சமூக வலைதளங்களில் வழக்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.