SA vs ZIM: நெருங்கிய வெற்றி; குறுக்கிட்ட மழை; பரிதாபமாக பாயின்ட்டை இழந்த தென்னாப்பிரிக்கா!

சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்காவும் ஜிம்பாப்வே அணிகளும் மோதியிருந்தன.

தென்னாப்பிரிக்கவுக்கும் மழைக்கும் எப்போதுமே ஆகவே ஆகாது போல! ஜிம்பாப்வேக்கு எதிராக தென்னாப்பிரிக்கா வெற்றியை நெருங்கிய சமயத்தில் மழை குறுக்கிட ஆட்டம் அத்தோடு முடித்து வைக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

SA vs ZIM

ஆரம்பத்திலிருந்தே மழை பெய்து கொண்டிருந்ததால் போட்டி தொடங்குவதற்கு தாமதம் ஆகியிருந்தது. மழை காரணமாக போட்டி 9 ஓவர்களாகவும் குறைக்கப்பட்டது. ஜிம்பாப்வே அணி முதலில் பேட் செய்திருந்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் வேய்ர்ன் பர்னலும் லுங்கி இங்கிடியும் சிறப்பாக வீசி முதல் 4 ஓவர்களுக்குள்ளாகவே ஜிம்பாப்வேயின் டாப் 4-ஐ காலி செய்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சிக்கந்தர் ராசாவும் இங்கிடியின் பந்தில் டக் அவுட் ஆனார். ஜிம்பாப்வே சார்பில் மதவீர் மட்டும் நின்று அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தி கொடுத்தார். அவர் 18 பந்துகளில் 35 ரன்களை எடுத்திருந்தார். ஜிம்பாப்வே அணி 9 ஓவர்களில் 79 ரன்களை எடுத்திருந்தது.

தென்னாப்பிரிக்காவிற்கு டார்கெட் 80. மழை குறுக்கிடும் வாய்ப்பிருந்ததால் தென்னாப்பிரிக்க அணி தொடக்கத்திலிருந்தே வேகமாக ஸ்கோர் செய்தது. சத்தாரா வீசிய முதல் ஓவரில் மட்டும் டீகாக் 23 ரன்களைச் சேர்த்திருந்தார். இந்த ஓவரில் மட்டும் நான்கு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் வந்திருந்தன. மீண்டும் மழை குறுக்கிட்டது. DLS படி டார்கெட் மாற்றியமைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க அணி 7 ஓவர்களில் 64 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. முதல் ஓவரிலேயே டீகாக் வெளுத்தெடுத்திருந்ததால் தென்னாப்பிரிக்கா எளிதில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இயற்கையே சதி செய்தது. 3 ஓவர்களில் 51 ரன்களை எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிடவே போட்டி அத்தோடு முடிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

7 ஓவர்களில் 64 எனும் போது 3 ஓவர்களுக்கு 51 ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்கா வெற்றியாளர்களாகவே அறிவிக்கப்பட்டிருக்கலாம்.

SA vs ZIM

ஆனால், போட்டியில் முடிவை எட்டுவதற்கு இரு அணிகளும் குறைந்தபட்சமாக 5 ஓவர்களையாவது ஆடியிருக்க வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி, தென்னாப்பிரிக்கா 5 ஓவர்களை ஆடுவதற்கு முன்பாகவே மழை குறுக்கிட்டதால் போட்டி முடித்து வைக்கப்பட்டது.

இதற்கு முன்பே சில முறை உலகக்கோப்பைகளில் தென்னாப்பிரிக்கா அணி மழையினால் அநியாயமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 1992 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி நியாபகமிருக்கிறதா? அந்தச் சோகத்தின் வரிசையில் இந்தப் போட்டியும் இணைகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.