சென்னை அசோக் நகர் காவல் நிலையம் அருகே தனியார் மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து இன்று காலை ஏற்பட்டது. இந்த மருந்து குடோன் கடந்த ஒரு வருடமாக சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கண்ட பொதுமக்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
தீபாவளி என்பதால் பணியாளர்கள் விடுப்பில் இருந்துள்ளனர். இதன் காரணமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆனால் மருந்து குடோனில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது. இந்த தீ விபத்தில் ஒரு கார் மற்றும் இரண்டு சரக்கு வாகனம் முற்றிலும் எரிந்துள்ளது. தீ விபத்துக்கான காரணத்தை தீயணைப்புத்துறையினரும் போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்.
இதேபோன்று சென்னை கீழ்கட்டளையில் ஹார்டுவேர் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ராக்கெட் வெடி வெடித்த போது தீப்பொறி விழுந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பைப்புகள் எரிந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதேபோன்று நேற்று இரவு திருவள்ளூரில் உள்ள இந்தியன் வங்கியில் நகைகடன் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பற்றி எரிந்ததில் நகை வைப்பு ஆவணங்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு வங்கியில் ஏற்பட்ட தீயை அனைத்து உள்ளனர். இந்த தீ விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று இடங்களில் தொடர்ந்து தீ விபத்து சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே அரசு நிர்ணயித்த நேரத்தில் பட்டாசு வெடிக்குமாறு போலீசார் அறிவுறுத்துகின்றனர். அவ்வாறு வெடிக்கும் பட்சத்தில் இது போன்ற சம்பவங்கள் தடுக்கப்படும் அல்லது உண்மையான காரணங்கள் தெரியவரும் என்ன போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் தெரிவித்தனர்.