டாக்கா, நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கரை கடந்த புயல் காரணமாக பெய்த கன மழைக்கு, மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியது. இதற்கு ‘சிட்ரங்’ என பெயர் சூட்டப்பட்டது.
இந்த புயல் வங்க தேசத்தில் நேற்று காலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்தது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்த 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். அங்கு, 576 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் தங்க வைக்கப்பட்டனர்.
இதேபோல், நம் நாட்டிலும் மேற்கு வங்க மாநிலத்தில் சிட்ரங் புயல் காரணமாக மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்து இருந்தது.
இதையடுத்து, மேற்கு வங்கத்தின் கடலோர பகுதிகளிலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இந்நிலையில், எதிர்பார்த்ததை விட வேகமாக, நேற்று முன்தினம் நள்ளிரவே சிட்ரங் புயல் கரையை கடந்தது.
இதன் தொடர்ச்சியாக பெய்த கன மழையால், வங்கதேசத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். புயல் காரணமாக வங்கதேசத்தில் நேற்று முன்தினமே விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement