கோவை: கோவையில் கார் வெடித்து உயிரிழந்த ஜமேஷா முபினின் கூட்டாளிகள் 5 பேரை கைது செய்துள்ள போலீஸார், அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு (‘உபா’) சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்பு உடைய ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களுடன், உயிரிழந்த முபினுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கோயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு வழியாக கடந்த 23-ம் தேதி அதிகாலை 4.10 மணி அளவில் சென்ற மாருதி கார், சங்கமேஸ்வரர் கோயில் முன்புள்ள வேகத் தடையை கடந்தபோது திடீரென வெடித்து தீப்பிடித்தது. காரில் 2 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததும், அதில் ஒரு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதும், காரை ஓட்டிவந்த உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த ஜமேஷா முபின் (25) என்பவர் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
டிஜிபி சைலேந்திர பாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோர்வந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். உடைந்த காரின் உதிரிபாகங்கள், அங்கு சிதறிக் கிடந்த ஆணிகள், கோலி குண்டுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர்.
உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் ரசாயனப் பொருட்கள், வயர்கள் உள்ளிட்டவை அங்கு அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
முதலில் இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழப்பு, வெடிபொருள் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் உக்கடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். தொடர்ந்து, 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
முபின் வீடு அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், 22-ம்தேதி, அதாவது சம்பவத்துக்கு முந்தைய நாள் இரவு 11.25 மணிக்கு முபின்வீட்டில் இருந்து அவர் உள்ளிட்ட5 பேர் ஒரு பெரிய மூட்டையை தூக்கிச் சென்று காரில் ஏற்றும் காட்சிபதிவாகியிருந்தது. அதில் இருந்தது வெடிபொருட்களா, அதை காரில் ஏற்றிஎங்கு எடுத்துச் சென்றனர் என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து முபினுடன் தொடர்பில் இருந்தநபர்கள், அவரது கூட்டாளிகள் யார் யார் என தீவிரமாக விசாரித்தனர்.
அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் 7 பேரை பிடித்து விசாரித்தனர். உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதில் 3 பேர்,முபினின் வீட்டில் இருந்து மூட்டையை தூக்கிச் சென்றவர்கள்.
முபின் காரை எங்கு ஓட்டிச் சென்றார், காரில் சிலிண்டர்கள் எதற்காக எடுத்துச் செல்லப்பட்டன, கோயில் அருகே எதேச்சையாக கார் வெடித்துவிபத்து நடந்ததா, திட்டமிட்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதா என்று அவர்களிடம் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘புலன் விசாரணை அடிப்படையில் இந்தவழக்கில் சட்டப்பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன. கூட்டுச் சதி, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் (‘உபா’), 2 பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு
கடந்த 2019-ல் ஈஸ்டர் பண்டிகையன்று இலங்கையில் உள்ள தேவாலயத்தில் தீவிரவாதிகளால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஜக்ரன் ஹாசீம் என்ற தீவிரவாதிக்கு தொடர்பு இருப்பதும், இந்தியாவின் தென் மாநிலங்களை சேர்ந்த பலரிடம் ஜக்ரன் ஹாசீம் செல்போன் மூலம் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. அவருடன் அடிக்கடி போனில் பேசிய கோவை உக்கடத்தைசேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளரான முகமது அசாருதீன் தற்போது கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கார் வெடிப்பில் உயிரிழந்த முபின்,முகமது அசாருதீனின் நெருங்கிய கூட்டாளியாக இருந்ததும், வாட்ஸ்அப் மூலம் தொடர்ச்சியாக அவர்கள் பேசி வந்ததையும் போலீஸார் கண்டறிந்தனர். அதன் அடிப்படையில், 2019-ல்முபின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
பொறியியல் பட்டதாரியான முபினுக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பழைய புத்தகக் கடையில் வேலை செய்துவந்த அவர், சில ஆண்டுகளாக சாலையோரத்தில் பழைய துணிகளை விற்பனை செய்து வந்துள்ளார். உக்கடம் ஜி.எம்.நகரில் வசித்த அவர்,40 நாட்களுக்கு முன்புதான் கோட்டைமேடு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடியேறியது குறிப்பிடத்தக்கது.
கோயில்களில் பலத்த பாதுகாப்பு
கோவையில் கோயில் முன்பு கார் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதனால், வேறு பல கோயில்கள் முன்பும் இதேபோல நடக்கக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர், வடபழனி முருகன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், திருச்செந்தூர் முருகன், மதுரை மீனாட்சி அம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உட்பட தமிழகம் முழுவதும் கோயில்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.