ராமேஸ்வரம் கடலில் கலக்கும் சாக்கடை.. "தீர்த்தக் கடலா?, கழிவுநீரா?" என நீதிமன்றம் கேள்வி

இந்தியா முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் தீர்த்தக்கடலில் நீராட வருகிறார்களா? அல்லது கழிவுநீரில் குளிக்க வருகின்றார்களா? என்று ராமேஸ்வரம் கடலில் சாக்கடை கலப்பதை தடுக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மார்க்கண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “ராமேஸ்வரத்தில் பழமையான சிவன் கோவில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்கள் கங்கை தீர்த்தத்திற்கு சமமானது எனக் கூறப்படுகிறது. ராமேஸ்வரம் பகுதியில் உள்ளேயும் வெளியேயும் 64 தீர்த்தங்கள் உள்ளன.
இதில், அக்னி தீர்த்தம் கோயிலின் வெளியே உள்ள கடல் பகுதியை குறிக்கும். இங்குள்ள உள்ள தீர்த்தத்தில் குளிப்பதற்காக இந்தியா முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், அக்னி தீர்த்தக் கடல் பகுதியில் சாக்கடைகள், குப்பைகள் மற்றும் பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால், ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
image
ராமேஸ்வரம் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க 52.60 கோடி ஒதுக்கப்பட்டது. 7 வருடங்கள் ஆகியும் இதுவரை 50 சதவீதம் பணிகளே நிறைவடைந்துள்ளன. இது குறித்து பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ராமேஸ்வரம் கோயில் அருகே உள்ள அக்னி தீர்த்தக் கடல் பகுதியில் சாக்கடைகள், குப்பைகள் மற்றும் பல்வேறு கழிவுகள் கலப்பதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் புகைப்படத்துடன் கூடிய ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டது. இதுபோன்ற மற்றொரு வழக்கில் வழக்கறிஞர் ஆணையம் நியமனம் செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் “வங்காள விரிகுடா கடலில் சாக்கடை தண்ணீர் கலப்பதை தடுக்க பல்வேறு வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டது.
image
இதனையடுத்து நீதிபதிகள், இதனை சரி செய்ய யார் நடவடிக்கை எடுக்க வேண்டும்?. பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்தும் மக்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் பகுதியில் சாக்கடை கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை,
இந்தியா முழுவதும் இருந்து வரும் மக்கள் தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? கழிவுநீரில் குளிக்க வருகின்றார்களா? என கேள்வி எழுப்பினர். உடனடி நடவடிக்கை மேற்கொண்டாலே இந்தப் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என குறிப்பிட்ட நீதிபதிகள், இதே தொடர்பான மற்றொரு வழக்கில் வழக்கறிஞர் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையை முழுமையாக தாக்கல் செய்யவும், வழக்கு குறித்து நகராட்சி நிர்வாகம், நீர் வளங்கள் துறை செயலர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், ராமேஸ்வரம் சிவன் கோயில் இணை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.