தனியார் பள்ளியில் ஓடிய ஆபாச வீடியோ! புகார் அளித்த மாணவியை மிரட்டிய தலைமை ஆசிரியர்

Abusive Video in Classroom: நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பகுதியில் ஜெ.ஜெயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் கணினி பாடம் நடத்துவதற்காக ப்ரொஜெக்டர் அறைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். 40-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்பறையில் இருந்த பொழுது யூடியூப் இணைப்பு மூலமாக  புரொஜெக்டரில் வகுப்பு நடைப்பெற்று உள்ளது. அப்போது  திடீரென ஆபாச காட்சிகள் கொண்ட வீடியோ ஓடியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட  மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

சுமார் மூன்றரை நிமிடங்கள் அந்த ஆபாச வீடியோ ஓடிய நிலையில் மாணவ, மாணவிகள் செய்வதறியாது புத்தகத்தால் முகத்தை மூடியவாறு வகுப்பறை விட்டு வெளியேறி உள்ளனர். ஆபாச வீடியோவை நிறுத்தத் தெரியாத ஆசிரியை பள்ளியின் மற்றொரு ஆசிரியரை அழைத்து ப்ரொஜெக்டரை நிறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து பெற்றோர்களிடம் தெரிவிக்க கூடாது என மாணவ மாணவிகளை பள்ளி நிர்வாகம் மிரட்டி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அதில் ஒரு மாணவி பள்ளியில் நடந்தவற்றை  பெற்றோரிடம் சொல்லி உள்ளார். அதிர்ந்து போன பெற்றோர் உடனடியாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாணவியோடு சென்று ஆட்சியரிடம் பள்ளியில் நடந்த சம்பவத்தை விவரித்து புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து  மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பள்ளியில் உரிய விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவை அடுத்து முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைகள் நல அலுவலர் மாவட்ட சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை அலுவலர் உள்ளிட்டோர் பள்ளியில் மாணவ மாணவிகளுடன் விசாரணை நடத்தி ஆய்வு செய்தனர். 

அப்போது ஆபாச வீடியோ ஓடியது உறுதி படுத்தப்பட்ட நிலையில் வகுப்பறையில் இருந்த மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் பள்ளியில் ஆபாச வீடியோ ஓடியதை ஆட்சியரிடம் புகார் அளித்ததை அறிந்த பள்ளி பிரின்சிபல் ஹோனா மாணவியின் பெற்றோரை தொடர்புக் கொண்டு எடுத்த எடுப்பிலயே “ஏய்யா” என ஒருமையில் மிரட்டும் தொனியில் பேசி “என்கிட்ட சொல்ல மாட்டியா” என பேசியும் புகார் அளித்த மாணவியிடம் திரும்ப, திரும்ப என்ன வீடியோ ஓடியது என கேட்டும், வீட்டில் ஏன் கூறினாய், என்னிடம் சொல்ல வேண்டியதுதானே என்று மிரட்டலாக பேசி உள்ளார். அந்த ஆடியோ தற்போது வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பள்ளியில் ஆபாச வீடியோ ஓடிய சம்பவம் நாகையில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.