கஞ்சா போதையில் வீடு திரும்பிய 10 ஆம் வகுப்பு மாணவி… அதிர்ச்சியில் உறைந்த தாய்!

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று ( நவம்பர் 29 ) மாலை பள்ளி முடிந்து வழக்கம்போல் வீடு தி்ரும்பி உள்ளார். வீடு திரும்பிய சில நிமிடங்களிலேயே மீண்டும் வெளியே சென்ற மாணவி, கிட்டதட்ட 2 மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்துள்ளார்.

ஏற்கெனவே சொல்லாமல் கொள்ளாமல் மாலை நேரத்தில் வெளியே சென்ற மகள் எப்போது வீடு திரும்புவார் என்ற பதற்றத்தில் இருந்துவந்த மாணவியின் தாய், அவர் போதையில் தள்ளாடியபடி வந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

என்னடி இது? எப்போதில் இருந்து இந்த பழக்கம்? என்று தாய் பதற்றமும், கோபமுமாக கேட்க, பள்ளிக்கு அருகே உள்ள் டீக்கடையில் கஞ்சா புகைத்ததாக கூலாக கூறி உள்ளார் மாணவி.

இதனை கேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் தாய், கஞ்சா விற்பனை செய்யும் டீக்கடைக்கு சென்று, எதற்காக என்மகளுக்கு கஞ்சா கொடுத்தீர்கள் என்று கோபம் கொப்பளிக்க கேட்டுள்ளார்.

அதற்கு, நாங்க ஒண்ணும் உங்க மகளுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து, கஞ்சா கொடுக்கல…. அவர் தான் தினமும் இங்கு ஆண் நண்பர்களுடன் வந்து கஞ்சா புகைத்துவிட்டு செல்கிறார். பணம் கொடுத்தால், உங்க மகளுக்கு மட்டுமல்ல…. யாருக்கு வேண்டுமானாலும் நாங்க கஞ்சா கொடுப்போம் என்று டீக்கடை நிர்வாகத்தினர் அசால்ட்டாக பதில் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, டீக்கடையில் கஞ்சா விற்கப்படுவது குறித்து, சிறுமியின் தாய் சந்திரகிரி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி, கல்லூரி வளாகங்களுக்கு அருகே எந்த வகையான போதைப்பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது என்ற சட்டம் அனேகமாக அனைத்து மாநிலங்களிலும் இருக்கதான் செய்கிறது. ஆனாலும் பல இடங்களில் பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு உள்ளேயே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் எளிதாக கிடைக்கும் நிலைதான் உள்ளது.

ஒரு காலத்தில் வாலிப, வயோதிகர்களே மதுபானம் குடிப்பதற்கு அச்சப்பட்டு, ஊரராரின் கண்களில் படாமல், ஊருக்கு ஒதுக்குப்புறமாக சென்று யாருக்கும் தெரியாமல் மது அருந்திவிட்டு வந்தனர். ஆனால் இன்று மாநில அரசே டாஸ்மாக் என்ற பேரில் மதுபான கடைகளை நடத்தி வருவதன் விளைவாக, தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் மது அருந்தும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். இதுபோதாதென்று கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்துக்கும் அவர்கள் ஆளாகி வருவது இன்றைய தலைமுறை பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.