World Soil Day: இப்படியே போனா உணவு பஞ்சம் தான் வரும்… ‘மண் காப்போம்’ இயக்கம் அதிர்ச்சி தகவல்!

மண் வளத்தை காப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், டிசம்பர் 5 ஆம் தேதி (இன்று) உலக மண் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி, ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்கத்தின் தன்னார்வலர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கார், பைக், ஆட்டோ போன்ற வாகனங்களில் ‘மண் காப்போம்’ என்ற ஸ்டிக்கர் ஓட்டியும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக ‘மண் காப்போம்’ இயக்கத்தினர் கூறுகையில், “உலகளவில் மண் வளம் மிக வேகமாக குறைந்து வருகிறது. உலகளவில் சுமார் 52 சதவீதம் விவசாய நிலம் வளம் இழந்துவிட்டதாக ஐ.நா அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. மண்ணில் குறைந்தப்பட்சம் 3 சதவீதம் கரிம சத்து இருந்தால் தான் அதை மண் என்றே அழைக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால், இந்தியாவில் 63 சதவீத விவசாய நிலங்களில் கரிம சத்தின் அளவு 0.5 -க்கும் குறைவாக உள்ளது.

இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், உணவு பற்றாகுறை, தண்ணீர் பஞ்சம், உள்நாட்டு கலவரம் என பல அபாயகரமான பிரச்சிகனைகள் ஏற்படும். இதை தடுக்கவும், மண் வளப் பாதுகாப்பு குறித்த சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்க வலியுறுத்தி சத்குரு ஜக்கி வாசுதேவே அவர்கள் ‘மண் காப்போம்’ இயக்கத்தை இந்த ஆண்டு தொடங்கினார்.

இதற்காக அவர் மார்ச் 21-ம் தேதி முதல் 100 நாட்களில் 27 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் சவாலான பயணம் மேற்கொண்டு உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவரது அந்த சீரிய முயற்சியின் பயனாக 74 நாடுகள், 11 இந்திய மாநிலங்கள், 9 ஐ.நா அமைப்புகள் இந்த இயக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. மேலும், இதுவரை 391 கோடி மக்களும் இவ்வியக்கத்திற்காக குரல் கொடுத்துள்ளனர்.

அனைத்து விவசாய நிலங்களிலும் குறைந்தப்பட்சம் 3 முதல் 6 சதவீதம் கரிம சத்து இருக்க வேண்டும். அதற்கான செயல்களை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை வழங்க வேண்டும். மர விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கார்பன் கிரெடிட் என்ற பெயரில் மானியம் வழங்க வேண்டும். 3 சதவீதற்கும் மேல் கரிம சத்து கொண்ட மண்ணில் விளையும் விளைப் பொருட்களுக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் என்பது இவ்வியக்கத்தின் பிரதான பரிந்துரைகள் ஆகும்” என்றனர் அவர்கள்.

விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லாததால், கிராமப்புறங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள், ஏற்கெனவே மெல்ல மெல்ல வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.