ஈரோடு: உலா வரும் 40 காட்டு யானைகள்; மோதலில் பெண் யானை பலி! – பீதியில் கிராம மக்கள்

ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுகா, மல்லன்குழி பஞ்சாயத்துக்குட்பட்ட அருள்வாடி கிராமத்தில் கடந்த 2 நாள்களாக சுமார் 40 காட்டு யானைகள் முகாமிட்டிருக்கின்றன. தமிழக-கர்நாடக எல்லையில் இந்தக் கிராமத்தில் 3,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்குமாறு தமிழக வனத்துறையினரைக் கேட்டால் அருகில் கர்நாடக வனப்பகுதி இருப்பதால் அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தட்டிக் கழித்து விடுகிறார்களாம். நீண்ட காலமாக இந்தப் பிரச்னை நீடித்து வரும் நிலையில், கடந்த 2 தினங்களாக இந்தப் பகுதியில் முகாமிட்டிருக்கும் சுமார் 40 காட்டு யானைகள் விவசாய நிலங்களில் பயிரிட்டிருக்கும் வாழை, கரும்பு, ராகி, துவரை போன்றவற்றை மிதித்தும், சாப்பிட்டும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதுடன் ஊருக்குள் யானைக்கூட்டம் புகுந்து விடுமோ என்ற பீதியில் ஆழ்ந்திருக்கின்றனர்.

உயிரிழந்த காட்டு யானை

இந்த நிலையில், நேற்று இரவு மல்லன்குழி கிராமத்தையொட்டியிருக்கும் மேட்டு நிலத்துக்குள் புகுந்த இந்த யானைக் கூட்டத்திலிருந்த 2 யானைகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இரண்டு யானைகளும் கடுமையாக மோதிக் கொண்டதில் ஒரு ஆண் யானை தந்தத்தால் குத்தித் தள்ளியதில், 8 வயதுடைய பெண் யானை கீழே சரிந்து விழுந்து படுகாயமுற்றது.
இரவு நேரத்தில் யானைகளுக்கிடையே மோதல் ஏற்பட்டதால் அந்தப் பகுதி மக்களுக்கு உடனடியாக தெரியவில்லை. இன்று காலை அங்கிருக்கும் விளைநிலங்களுக்குச் சென்ற விவசாயிகள் சிலர் பார்த்த போதுதான் உயிருக்குப் போராடிய நிலையில் பெண் யானை இருந்ததை கண்டனர். இது குறித்து உடனடியாக தாளவாடி வனச்சரக அலுவலகத்துக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து அந்தப் பகுதிக்கு வனத்துறையினர் வந்து பார்த்தபோது, அந்த யானை உயிரிழந்துவிட்டது. தொடர்ந்து யானைக்கு, வனத்துறை கால்நடை மருத்துவரால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

உயிரிழந்த காட்டுயானையை பார்வையிடும் மக்கள்

பிரேத பரிசோதனை முடிவுக்குப் பிறகே யானை எதனால் இறந்தது என்பது தெரியவரும் என்றும், அதுவரையிலும் கிராம மக்கள் காட்டு யானைகள் கூட்டத்திடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். தற்போது மல்லன்குழி, அருள்வாடி போன்ற கிராமங்களைச் சுற்றியே இந்த யானைக்கூட்டம் உலா வருவதால் கிராம மக்கள் கடும் பீதியடைந்திருக்கின்றனர். மேலும், யானைகளால் சேதமடைந்திருக்கும் வாழை, கரும்பு, ராகி, துவரை போன்ற பயிர்களுக்கு இழப்பீட்டு்த் தொகையையும் வனத்துறை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.