அனைவருக்கும் பசுமை வணக்கம்!
‘இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) டிசம்பர் 29-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம் இந்திய மக்கள் பெரிய அளவில் பயன்பெறப்போகிறார்கள்’ என்கிற செய்திகள் பரபரக்கின்றன.
அதேசமயம், ‘இந்த ஒப்பந்தம் மூலம் ஆஸ்திரேலியாதான் பயன் பெறப்போகிறது. இந்திய மக்கள்தொகை கிட்டத்தட்ட 140 கோடி. ஆஸ்திரேலியா மக்கள்தொகையோ வெறும் 3 கோடி. ஆக, இந்தியா என்பது வளமான பெரிய சந்தை என்பதையறிந்தே, தங்கள் நாட்டு உற்பத்தி பொருள்களை வரியில்லாமல் இந்தியாவில் விற்பனை செய்யத் தந்திரமாக இந்தச் சலுகையைப் பெற்றுள்ளது ஆஸ்திரேலியா’ என்கிற எதிர்க்குரல்களும் கேட்கின்றன.
ஜவுளி, தோல், மேஜை போன்ற அறைகலன்கள், ஆபரணங்கள், இயந்திரங்கள்… எனச் சுமார் 6,000 பொருள்களை எந்த வரியும் செலுத்தாமல், ஆஸ்திரேலியாவுக்கு நாம் ஏற்றுமதி செய்யலாம். இதற்கு ஈடாக, ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, செம்மறி ஆட்டு இறைச்சி, அலுமினா (அலுமினியம் ஆக்ஸைடு), எல்.என்.ஜி, மாங்கனீசு, காப்பர், நிக்கல் உள்ளிட்டவற்றின் வரியை இந்தியா ரத்து செய்துள்ளது.
நம் விவசாயிகளுக்கு ஆடு வளர்ப்பு என்பது நடமாடும் ஏ.டி.எம். ஆனால், பல்வேறு வரிச்சலுகைகளுடன் ஆஸ்திரேலிய பண்ணைகளில் வளர்க்கப்படும் செம்மறியாடுகளின் இறைச்சி, வரியின்றி இந்தியச் சந்தையில் வந்து குவியப்போகிறது. இதைப் பற்றிக் கவலைப்படும் இந்திய விவசாயிகள் தரப்பினர், ‘செம்மறியாட்டு இறைச்சி உள்ளிட்ட வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்யும் ஷரத்துக்களையாவது உடனே நீக்க வேண்டும். இல்லையேல் விவசாயிகளின் பாதிப்பு பல மடங்காக இருக்கும்’ என்று எச்சரிக்கிறார்கள்.
என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?
– ஆசிரியர்
