பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
‘மாண்டஸ்’ புயல் கரையை கடந்து விட்டாலும் கூட, சென்னையில் தொடர்ந்து மழை பெய்தது. நான்கு நாட்களாக அகற்றப்படாத குப்பை சாலைகளிலும், தெருக்களிலும் பரவி கிடக்கின்றன. மழை நீரில் ஊறி, அவற்றிலிருந்து தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசத் துவங்கிஉள்ளது. தொற்று நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன.
முதல்வரின் ‘கான்வாய்’ காரில் தொங்கிய சென்னை மேயரும், கமிஷனரும், அரசு அவங்களுக்கு கொடுத்த காரில் நகரை வலம் வந்தாலே, இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாமே!
தி.மு.க.,வில் இருந்து, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ள, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பேட்டி:
ஈழப்பிரச்னையால், வைகோவுடன் பயணித்தேன். தி.மு.க.,வில் இருந்து வைகோ வெளியேறிய போது, அவருடன் சென்றது தான், என் அரசியல் வாழ்க்கைக்கு பின்னடைவு; வைகோவால், நான் புறக்கணிக்கப்பட்டேன்; என் அரசியல் வாழ்வு மற்றவர்களுக்கு பாடம். பாக்கெட்டில் தலைவர்கள் படத்தை வைத்துக் கொள்ளும் அரசியல்வாதி நானல்ல. கருணாநிதியுடன் சண்டை கூட போட முடியும்; இப்போது அப்படி அல்ல.
‘வைகோவுடன் போன யாராவது, உயர்ந்த இடத்துக்கு போயிருக்காங்களா’ என, மற்ற கட்சியினர் கிண்டல் அடிப்பது உண்மைதான்னு சொல்றாரோ?
தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை:
‘சுதந்திர போராட்ட வரலாற்றை, மக்களை மையப்படுத்தி திருத்தி எழுத வேண்டும். காந்தி மட்டுமின்றி, பல்வேறு தலைவர்களுடைய பங்களிப்பை தெரிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்ய வேண்டும்’ என, கவர்னர் ரவி பேசி, வரலாற்று திரிபுவாதம் செய்துஇருக்கிறார். கவர்னராக ரவி நியமனம் செய்யப்பட்டது முதல், ஒரு அரசியல்வாதியாக, பா.ஜ.,வின் கொள்கை பரப்பு செயலராக செயல்பட்டு வருகிறார். ஆதாரமற்ற அவதுாறுகள் பேசுவதை, அவர் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்; இல்லை என்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அரசை மட்டும் வேலை வாங்க வேண்டிய கவர்னர், தன் பேச்சு திறமையால், உங்களை போன்ற அரசியல்வாதிகளை அறிக்கை எழுத வைத்து வேலை வாங்குகிறார் போலும்!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிக்கை:
‘ஏறு தழுவுதல் நம் அடையாளம். இயற்கையோடும், கால்நடைகளோடும் இரண்டற கலந்து வாழும் தமிழ் பண்பாட்டின் தொடர்ச்சி அது. ஜல்லிக்கட்டு, ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல’ என, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும், வீரத்துடன் அதை முறியடிப்போம்.

இவர் பேசுற வேகத்தை பார்த்தா, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டுல களம் இறங்கி, காளையை அடக்கப் போறாரோ?
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்