7 வயது சிறுவனுக்கு கட்டாயப்படுத்தி புகையிலையைக் கொடுத்த 16 வயது சிறுவர்கள்… அதிர்ச்சியளித்த வீடியோ

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூரில் அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. அதே வளாகத்தில் தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. மேல்நிலை, தொடக்கப் பள்ளிகளில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களை அழைத்துச் செல்வதற்காக பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பேருந்து வசதி செய்யப்பட்டிருக்கிறது.

புகையிலையை வாயில் வைக்கும் சிறுவன்

பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனம், மாலையில் மாணவர்களை திருப்பி அழைத்துச் சென்ற பின்னர் அருகில் உள்ள நாகல்குளம் என்ற கிராமத்தில் இரவு நேரத்தில் நிறுத்தப்படுவது வழக்கம். பின்னர் மறுநாள் வழக்கம் போல காலையில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்லும். இந்த நிலையில், அந்த வாகனத்தில் ஒரு சிறுவனுக்கு புகையிலை பொருளை சிலர் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வர போலீஸார் விசாரணை நடத்தினார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பேருந்து வழக்கம்போல நாகல்குளம் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது அதில் சில சிறுவர்கள் ஏறியிருக்கின்றனர். அவர்கள் அங்கு வந்த ஏழு வயது சிறுவனுக்கு புகையிலைப் பொருளைக் கொடுத்து உதட்டுக்குள் வைக்குமாறு நிர்ப்பந்திக்கும் வீடியோ தான் வெளியானது எனத் தெரிய வந்தது.

சிறுவன்

அந்த வீடியோவில், `ஏழு வயது சிறுவனுக்கு 16 வயதிருக்கும் சில சிறுவர்கள் புகையிலைப் பொருளைக் கொடுத்து உதட்டுக்குள் வைக்குமாறு’ கூறுகிறார்கள். அதன்படி அந்த சிறுவனும் செய்து கொள்கிறான். அப்போது அவனுக்கு ஒத்துக் கொள்ளாமல் அதை கையில் எடுத்துவிடுகிறான். அப்போது அங்குள்ள சிறுவர்கள், அவனை மீண்டும் அதை வாயில் வைக்கச் சொல்கிறார்கள். அதன்படி செய்யும் சிறுவன் போதையில் நடக்க முடியாமல் தள்ளாடுகிறான். அவனது கண்கள் நிலகுத்தும் அளவுக்கு இருக்கிறது. அதைப் பார்த்து அருகில் இருக்கும் சிறுவர்கள் சிரித்து ஆர்ப்பரிக்கிறார்கள்.

இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பார்த்தவர்கள், கடுமையான விமர்சங்களை முன்வைத்தனர். அந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என பதிவிட்டனர். இது குறித்து பாவூர்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவர்கள் மூவர் சேர்ந்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதும், அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதும் தெரியவந்தது. உடனடியாக மூவரையும் பிடித்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின் விசாரித்து வருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.