சென்னை: மார்கழி மாத பிறப்பையொட்டி தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மார்கழி மாத சிறப்பு பூஜை தொடங்கியது. பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே திரளானோர் கலந்து கொண்டு வழிபாடுகளில் பங்கேற்றனர். பக்தர்களின் பஜனைகளும் கலைக்கட்டியது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பழமையான வைணவ திருத்தலங்களில் ஒன்றான மன்னார் ராஜகோபாலசுவாமி கோயிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோ பூஜையுடன் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மெய்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் 3003 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அம்மன் வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சங்கர ராமேஸ்வரர் கோயிலில் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. விஸ்வரூப தரிசனத்தில் காட்சியளித்த சாமியை காண பக்தர்கள் குவிந்தனர்.
தேனி மாவட்டம் போடியில் 700 ஆண்டுகள் பழமையான ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் மார்கழி மாத முதல் நாளை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதிகாலையில் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.