ஸ்பெயின் நாட்டின் வலென்சியா(Valencia) பகுதியிலுள்ள ஒரு நகரத்தின் தெருக்களில் நிர்வாணமாகத் திரிந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்ட 29 வயது இளைஞனுக்கு ஆதரவாக மீண்டும் நிர்வாணமாகச் சுற்றித்திரிய நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

ஸ்பெயினில் 1988-ம் ஆண்டு முதல் பொது நிர்வாணம் என்பது சட்டப்பூர்வமாக இருக்கிறது. அதன்படி யார் வேண்டுமானாலும் கைதுசெய்யப்படாமல் தெருவில் நிர்வாணமாக நடக்கலாம். இருப்பினும் வல்லடொலிட்(Valladolid), பார்சிலோனா(Barcelona) போன்ற சில பகுதிகளில் மட்டும் நிர்வாணத்தைக் கட்டுப்படுத்த சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் தான், அலெஜான்ட்ரோ கொலோமர்(Alejandro Colomar) என்றழைக்கப்படும் 29 வயது இளைஞன், தெருக்களில் நிர்வாணமாக நடந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு வழக்கு வலென்சியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையில் அலெஜான்ட்ரோ கொலோமர், “இந்த அபராதத்தில் எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள் என்னை ஆபாசம் என்று குற்றம் சாட்டினார்கள். பாலியல் நோக்கத்தைக் குறிக்கும் அகராதியின்படி, அதற்கும், நான் நடந்துகொண்டதற்கும் எந்த சம்பந்தமுமில்லை” என்று வாதிட்டார்.

அதைத்தொடர்ந்து நீதிமன்றமும், “அவர் அவ்வாறு நடந்துகொண்டது குடிமக்களின் பாதுகாப்பு, அமைதி அல்லது பொது ஒழுங்கில் எந்தவொரு மாற்றத்தையும் குறிப்பதாக இல்லை” எனக் கூறியது. அதோடு பொது நிர்வாணம் தொடர்பான ஸ்பானிஷ் சட்டத்தில் வெற்றிடம் இருப்பதையும் நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
இது அலெஜான்ட்ரோ கொலோமர் மீண்டும் தெருக்களில் மீண்டும் நிர்வாணமாகச் சுற்றித் திரிவதற்குத் தடையில்லை என்பதாகவே அமைந்திருக்கிறது. இதுகுறித்து ஊடகத்திடம் பேசிய அலெஜான்ட்ரோ கொலோமர், தான் 2020-ல் பொது இடங்களில் ஆடைகளை அகற்றத் தொடங்கியதாகவும், நிர்வாணமாக நடக்கும்போது அவமானங்களை விட அதிக ஆதரவைப் பெற்றதாகவும் கூறினார்.