அகமதாபாத்: இந்திய பிசியோதெரபிஸ்ட் (இயன்முறை மருத்துவர்கள்) சங்கத்தின் 60வது தேசிய மாநாடு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: பிசியோதெரபியில் மக்களுக்கும், நாட்டுக்கும் பல முக்கிய தகவல்கள் உள்ளன. பிசியோதெரபியின் முதல் நிபந்தனை சீரான நிலைத்தன்மை தான். பொதுவாக, ஆர்வமிகுதியில் மக்கள் 2 முதல் 4 நாட்கள் வரை உடற்பயிற்சி செய்வர். அதன்பின் அதை கைவிட்டுவிடுவர். ஆனால் சீரான பயிற்சி இல்லை என்றால், உரிய பலன் கிடைக்காது என்பது பிசியோதெரபிஸ்ட் டுக்கு தெரியும்.
பிசியோதெரபியில் தொடர்ச்சி மற்றும் ஆழ்ந்த நம்பிக்கை முக்கியமாக இருப்பது போல் நாட்டின் வளர்ச்சிக்கும், நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்படுவது முக்கியம். எனக்கும் சில நேரங்களில் பிசியோதெரபிஸ்ட்களின் உதவி தேவைப்பட்டது. பிசியோதெரபியுடன், யோகாவின் நிபுணத்துவம் இணைந்தால், இரண்டின் சக்தியும் பன்மடங்கு அதிகரிக்கும் என்பது எனது அனுபவம். பிசியோதெரபி தேவைப்படும் உடலின் பொதுவான பிரச்சினைகளுக்கு, சில நேரங்களில் யோகா மற்றும் ஆசனங்கள் தீர்வை அளிக்கின்றன. உடல் தகுதிக்கு சரியான பயிற்சியை, மக்களுக்கு பிசியோதெரபிஸ்ட்டுகள் கற்றுக் கொடுக்க வேண்டும். சவால்களைவிட நோயாளிகளின் உள் பலம் வலுவானது என்பதை
பிசியோதெரபிஸ்ட்கள் அறிவர். இது நிர்வாகத்துக்கும் பொருந்தும். அதனால்தான், பிசியோதெரபி என்னை கவர்ந்தது. சிறிய ஊக்குவிப்பு இருந்தால், கடுமையான சவால்களையும் மக்களால் வெல்ல முடியும்.
துருக்கி பூகம்பத்தால் 20,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுபோன்ற பேரிடர் நேரங்களில், பிசியோதெரபிஸ்ட்டுகள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். இது போன்ற சூழலில், செல்போன்கள் மூலம், டெலிமெடிசன் முறையில் ஆலோசனை வழங்கலாம். நோயாளிக்கு பிசியோதெரபிஸ்ட் தொடர்ந்து தேவைப்படாத வகையில் தன்னம்பிக்கையை கற்றுக் கொடுப்பவர்தான் சிறந்த பிசியோதெரபிஸ்ட்.
மக்களை தாங்களாக மீட்பு நிலையை அடையவைப்பதுதான் பிசியோதெரபிஸ்ட்களின் இலக்காக இருக்க வேண்டும். அதனால், தான் இந்தியா தன்னம்பிக்கை மற்றும் தற்சார்பை நோக்கி செல்கிறது. அது எவ்வளவு முக்கியம் என்பதை பிசியோதெரபிஸ்ட்களால் உணர முடியும். பிசியோதெரபிஸ்ட்களை, தேசிய டிஜிட்டல் திட்டத்துடன் இணைத்ததால், அவர்களால், நோயாளிகளுக்கு எளிதில் உதவ முடிகிறது. பிசியோ தெரபிஸ்ட்களால், இந்தியா ‘ஃபிட்டாகவும், சூட்டர் ஹிட்டாகவும்’ இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.