சென்னையில் இன்று காலை ஐடி ரெய்டு; சிக்கும் பெருந்தலைகள் யார், யார்?

சென்னையில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அண்ணா நகரில் அசோக் ரெசிடென்சி உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வரி ஏய்ப்பு புகார்

மொத்தம் நான்கு வாகனங்களில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வருகை புரிந்ததாக தெரிகிறது. வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதேபோல் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.

சிக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்

மேலும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் சோதனை நடந்து கொண்டிருக்கிறது. மொத்தம் 60க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. அதாவது, மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களான ஆதித்யா ராம், அம்பாலால், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் செயல்பட்டு வரும் அசோகா ரெசிடென்சி ஆகியவை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஓட்டல் நடத்தும் பிரபல நிறுவனம்

இதுதவிர சில ஹாஸ்பிடாலிட்டி குழுமங்கள், ஓட்டல்கள் நடத்தும் குழும நிறுவனத்திலும் ரெய்டு நடந்து வருகிறது. இதில் பல்வேறு ஓட்டல்களை நிர்வகித்து வரும் நிறுவனத்தின் மீது தான் அதிக புகார்கள் வந்துள்ளதாக கூறுகின்றனர். இதையொட்டி ரெய்டு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திடீர் பரபரப்பு

வீடு, அலுவலகங்களில் இருந்து யாரையும் வெளியே செல்லவும், புதிதாக யாரும் உள்ளே வரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து வரும் ஐடி ரெய்டால் தமிழ்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் களம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் ஒட்டுமொத்த கவனமும் ஈரோடு பக்கம் திரும்பியுள்ளது. இந்த சூழலில் இன்றைய தினம் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை கவனத்தை திருப்பியுள்ளது. வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்கள் எதிர்க்கட்சி பிரமுகர்களா?

சிக்கிய ஆவணங்கள்

இல்லை அவர்களுக்கு ஆதரவாகவோ, பினாமியாகவோ செயல்படுகிறார்களா? ஆளுங்கட்சிக்கு டெல்லி கொடுக்கும் அழுத்தமா? போன்ற கேள்விகளை எழுப்பிகிறது. அடுத்த சில மணி நேரங்கள் சோதனை தொடர்ந்து நடைபெறும் எனக் கூறப்படுகிறது. அதன் முடிவில் சிக்கிய ஆவணங்கள், ரொக்கம், வரி ஏய்ப்பு செய்த சொத்து விவரங்கள் உள்ளிட்டவை குறித்து தகவல் வெளியாக வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.