கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு: கழிவுநீர் கலப்பு காரணமா? அதிகாரிகள் விசாரணை

கடலூர்: கடலூர் தென்பெண்ணையாற்றில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கலப்பால் மீன்கள் இறந்ததா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் தென்பெண்ணையாற்றில் நேற்று இரவு ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனே தகவல் தெரிவித்தனர்.

ஆனால் இரவு நேரம் என்பதால் அதிகாரிகள் அங்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இன்றுகாலை ஆற்றுப்பகுதிக்கு சென்ற அதிகாரிகள் மீன்கள் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கழிவுநீர் கலந்ததால் மீன்கள் இறந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. விசாரணை முடிவில்தான் மீன்கள் எப்படி இறந்தன என்பது குறித்த தகவல் வெளியாகும் என தெரிகிறது. தென்பெண்ணையாற்றில் கடந்த சில ஆண்டுகளாக கழிவுநீர் அதிகளவில் கலந்து வருகிறது.

தற்போது கழிவுநீரால் தான் மீன்கள் அனைத்தும் செத்து மிதக்க நேரிடுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதுடன் தற்போது செத்து மிதக்கும் மீன்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என சுற்றுப்புற பகுதி மக்கள் தெரிவித்தனர். கடலூர் தென்பெண்ணை ஆற்றில் உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடித்து விற்பனை செய்து வரும் நிலையில் ஆற்றில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.