பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர் கொண்ட குழுதான் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

டெல்லி: சிபிஐ இயக்குநர் தேர்வு செய்யப்படுவது போல் தலைமை தேர்தல் ஆணையரும் தேர்வு செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை கொலீஜிய முறையில் நியமிக்க கோரி அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு விசாரித்து வந்தது. இதனிடையே அனைத்து தரப்பினரின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.   

உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில், ‘ நியாயமாக தேர்தல்கள் நடைபெற தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை.சிபிஐ இயக்குநர் தேர்வு செய்யப்படுவது போல் தலைமை தேர்தல் ஆணையரும் தேர்வு செய்யப்பட வேண்டும்.பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும். தலைமைச் தேர்தல் ஆணையரையும் குழுவே தேர்வு செய்ய வேண்டும்.

எதிர்க்கட்சி வரிசையில் உள்ள பெரிய கட்சியின் தலைவர் குழுவில் இடம்பெற வேண்டும். பிரதமர் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் பேரிலேயே தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும். எனவே தேர்தல் ஆணையர் நியமன நடைமுறையை மாற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் இதற்காக சட்டம் இயற்றப்படும் வரை இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும்.தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதைப் போலவே பதவி நீக்கம் செய்யும் முறையும் இருக்க வேண்டும் ,’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.