திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, கும்மிடிப்பூண்டி சிப்காட் அடுத்த தேசிய நெடுஞசாலையில் ரவி என்பவருக்கு சொந்தமான ஆணி தொழிற்சாலையும், அதனை ஒட்டி பழைய இரும்பு பொருட்களுக்கான குடோனும் உள்ளது.
இந்த குடோனில் பழைய இரும்பு தகடுகளை வெல்டிங் வைக்கும் வேலை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், நேற்று பிற்பகல் குடோனில் இருந்த இரண்டு தொழிலாளர்களும் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர்.

இந்த நேரம் பார்த்து குடோனில் திடீரென தீ பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு இந்த தீ அணைக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் சம்பவம் குறித்து விசாரணை செய்ததில், பழைய தகடுகளை வெல்டிங் செய்த போது அதிலிருந்து பரவிய நெருப்பு துகள்களால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.