நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து எடுக்கப்படும் பாறைகள், ஜல்லி, கல், எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமம் ஏற்றிச் செல்லும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் தென்காசி மாவட்டம் புளியறை செக்போஸ்ட் வழியாக கேரளாவுக்கு கொண்டுச் செல்லப்படுகின்றன. கனிமவளக் கடத்தல் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
கேரளாவுக்குச் செல்லும் லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்லப்படுவதால் சாலைகள் நாசமடைகின்றன. அத்துடன், அணிவகுத்துச் செல்லும் கனரக வாகனங்களால், வாகன நெருக்கடி ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நடப்பதால் கனிமம் ஏற்றிச் செல்லும் லாரிகளை முறைப்படுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
கனிமங்களை அனுமதி இல்லாமல், கடத்திச் செல்லும் சம்பவங்களும் தொடர்ந்து வருவதால் தென்காசி இயற்கை வள பாதுகாப்பு சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் கனிமக் கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது தவிர அரசியல் கட்சியினரும் கனிமக் கொள்ளைக்கு எதிராக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் கனிமக் கொள்ளைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில், கனிமங்களை கேரளாவுக்குக் கடத்துவதைத் தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்தச் சூழலில், பழைய குற்றாலம் சாலை வழியாக கனிமங்களை ஏற்றிக் கொண்டு கேரளாவுக்கு செல்வதற்காக அந்த மாநிலத்தைச் சேர்ந்த லாரி வேகமாக வந்திருக்கிறது. அப்போது நன்னாகரம் பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் மீது லாரி மோதியிருக்கிறது. அதில் மூன்று பேரும் தூக்கி எறியப்பட்டிருக்கின்றனர். ஒரு இளைஞரின் காலில் லாரி டயர் ஏறியதால் எலும்புகள் உடைந்து நொறுங்கின.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அந்த இளைஞர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் படுகாயத்துடன் இருந்த இரு இளைஞர்களை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், படுகாயமடைந்த இளைஞர்கள் நன்னாகரம் பகுதியை சேர்ந்த கார்த்திக், சுபிஷ், பிரித்தம் என்பதும், இவர்கள் மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்ததும் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக லாரியின் ஓட்டுநரான செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர்.

கனிமவள கடத்தலைக் கண்டித்து தென்காசி மாவட்டத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில் கனிமவளக் கடத்தல் லாரியால் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.