புனே: கேரளாவில் ஓடும் ரயிலில் மர்ம நபர் ஒருவர் திடீரென சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிய சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரும், மத்திய புலனாய்வு அதிகாரிகளுடன் அடங்கிய கூட்டுக்குழு கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ரத்னகிரியில் கைது செய்யப்பட்ட அவர் விரைவில் கேரள போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிகிறது.
கேரள மாநிலத்தில் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. இரவு 9.30 மணி அளவில் கோழிக்கோடு மாவட்டம், எலத்தூர் ரயில் நிலையம் அருகே ரயில் சென்றது. அப்போது ரயிலின் டி1 பெட்டியில் பயணம் செய்த மர்ம நபர் திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை பயணிகள் மீது ஊற்றி தீ வைத்துள்ளான். அப்போது பெட்ரோல் பட்டு பயணிகள் சிலருடைய ஆடையிலும் தீப்பிடித்துள்ளது. அதை பார்த்த மற்ற பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளனர்.
அந்த மர்ம நபர் வெளியில் குதித்து தப்பியோடினான். அதற்குள் தீயை பயணிகளே அணைத்துவிட்டு ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ரயில்வே போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்தனர். அப்போது, தண்டவாளத்தில் கிடந்த ஒரு பையைக் கைப்பற்றினர். அதில் இன்னொரு பெட்ரோல் பாட்டில் மற்றும் 2 மொபைல் போன்கள் இருந்துள்ளன. அந்த பை தப்பியோடிய மர்ம நபருடையதா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ரயில் தண்டவாளத்தில் இருந்து பச்சிளம் குழந்தை, ஆண், பெண் என 3 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்தவர்கள் தவுபிக் மற்றும் ரெஹனா என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்று பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் டி1 பெட்டியில் பரவிய தீயில் இருந்து தப்பிக்க ரயிலில் இருந்து வெளியில் குதித்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையில், தீக்காயம் அடைந்த 8 பயணிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபரின் வரைபடம் சிசிடிவி காட்சி ஆதாரங்களின்படி வரைந்து வெளியிடப்பட்டது. அதைக் கொண்டு போலீஸார் தேடுதலில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒரு குழு மகாராஷ்டிரா விரைந்தது. இந்தச் சூழலில் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியில் அந்த சந்தேக நபர் கைதாகியுள்ளார்.