தமிழக சட்டப்பேரவையில், பட்ஜெட் குறித்தான துறை வாரியான விவாதமானது தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் தி.வேல்முருகன் ஆளுநருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் நிதி முறையாக செலவிடப்படுவதில்லை என கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ’டிஸ்க்ரினரி பண்ட்’ என்ற இனத்தில் ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.5 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக குறைக்கப்படும். அதேபோல், பல்வேறு துறைகளில் அரசு ஒதுக்கிய நிதியை ஆளுநர் மாளிகை செலவிட்ட விதம் குறித்தும் ஆய்வு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.நிதிஅமைச்சரின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
முன்னதாக சட்டப்பேரவை கூட்டத்தொரில் பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ஆளுநர் செயலகத்துக்கு ரூ.2.41 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு ரூ.3.6 கோடியாக உயர்த்தப்பட்டது. ஆளுநர் மாளிகைக்கான நிதி வெறும் ரூ.1 லட்சமாக இருந்ததை 3 மாதங்களில் ரூ.5 கோடி என அதிமுக ஆட்சியில் மாற்றிவிட்டனர். ஆளுநர் மாளிகைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டபோதுதான் விதிகள் மீறப்பட்டுள்ளன. ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.18 கோடியில் ரூ.11.32 கோடி எங்கே செலவிடப்பட்டது என்பது தெரியவில்லை” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.