புதுடெல்லி: பொது சிவில் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக யோசனைகள், கருத்துகள் கூற மேலும் 2 வார கால அவகாசத்தை வழங்குவதாக மத்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும், மதம், சாதி, இன அடிப்படையில் தனிப்பட்ட சட்டங்களை பின்பற்றாமல் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியாக, பொது சிவில் சட்டத்தை நடை முறைபடுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம் உள்ளிட்ட விவகாரங்களில் அனைத்து மதத்தினரையும் ஒரே மாதிரியான சட்டத்துக்குள் கொண்டு வர பொது சிவில் சட்டம் வழிவகை செய்கிறது.
இந்நிலையில் இதுதொடர்பான கருத்துகளைத் தெரிவிக்குமாறு கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி சட்ட ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக சட்ட ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் கருத்துகளைத் தெரிவிப்பதற்காக மேலும் 2 வார கால அவகாசத்தை நேற்று சட்ட ஆணையம் வழங்கியுள்ளது.
அதாவது பொதுமக்கள் தங்கள் கருத்துகளை இம்மாதம் 28-ம் தேதி வரை தெரிவிக்க முடியும். பொதுமக்களிடமிருந்து கிடைத்த அபரிமிதமான வர வேற்பையடுத்து கருத்துகளைத் தெரிவிக்க கால அவ காசத்தை சட்ட ஆணையம் நீட்டிப்பு செய்துள்ளது. சட்ட ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.