உதயநிதியை ரோட்டுக்கு இழுத்து வந்த அந்த நபர்: இனி மேல் தான் விஷயமே இருக்கு!

நீட் தேர்வை எதிர்த்து திமுகவின் இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி ஆகியவை சார்பாக தமிழ்நாடு முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

மதுரையில் இன்று அதிமுக மாநாடு நடைபெறும் நிலையில் அதற்கு போட்டியாக திமுக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறது என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் மதுரையைத் தவிர பிற மாவட்டங்களில் திமுக நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகின்றன.

மதுரையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில், திமுகவினர் மட்டுமல்லாமல் சமூகச் செயற்பாட்டாளா்கள், மாணவர்கள், பெற்றோா்கள், கல்வியாளா்கள் உட்பட பலா் கலந்து கொண்டு வருகின்றனர்.

சென்னையில் வள்ளுவா் கோட்டம் அருகே நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தை திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். அமைச்சா்கள்

மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, மற்றும் சென்னையைச் சோந்த எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர்ந்து வருவது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தையும் வேகப்படுத்தியுள்ளது. அண்மையில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். மகனை பறிகொடுத்த தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ்நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மீண்டும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை வேகப்படுத்தியுள்ளது.

மாணவன் ஜெகதீஸ்வரன்மரணம்: “ஆறுதல் சொல்ல தெம்பு இல்ல” மனமுடைந்து பேசிய உதயநிதி

மாணவர் ஜெகதீஸ்வரன் மரணத்துக்கு நீதி கேட்டு நீட் தேர்வில் வெற்றி பெற்ற அவரது நண்பர் ஃபயாஸ்தீன் ஊடகங்களில் பேசியது வைரலாகியது. நீட் தேர்வு முறையால் நன்றாக படிக்கும் மாணவர்கள் வாய்ப்பை இழப்பதாகவும், வசதி படைத்தவர்கள் பணத்தால் அந்த இடத்தை பெறுவதாகவும் மாணவர் ஃபயாஸ்தீன் பேசினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மறித்து நீட் விலக்கு எப்போது சாத்தியமாகும் என்று ஃபயாஸ்தீன் கேள்வி எழுப்பியதும் வைரலானது. அப்போது உதயநிதியால் பெரிதாக எந்த பதிலையும் கூறமுடியவில்லை. ஆனால் அதைத் தொடர்ந்து தான் நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுள்ளது. ஃபயாஸ்தீனுக்கு தனது பதிலை போராட்டம் மூலம் அளித்துள்ளார் என்று திமுகவினர் கூறிவருகின்றனர்.

முன்னதாக நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியின் தந்தை அம்மாசியப்பன் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் நீட் தேர்வு வேண்டாம், இதன் மூலம் பணம் படைத்தவர்கள் மட்டுமே பயன்பெறுகிறார்கள் என்றும், நீட் தேர்வுக்கு முன்னரும் சிறந்த மருத்துவர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ளனர் என்று பேசினார்.

ஜெகதீஸ்வரனின் மரணமும் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களே அதற்கு எதிராக பேசியதும் தமிழ்நாட்டில் மீண்டும் நீட் எதிர்ப்பு போராட்ட நெருப்பு பற்ற காரணமாக இருந்துள்ளது. இந்த நெருப்பு தொடர்ந்து பரவுகிறதா அல்லது ஒருநாள் சடங்காக அணைந்து விடுகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.