தங்கவயல் : “வாழ்வில் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. படிக்க படிக்கத்தான் மனதில் பதியும். மாணவர்கள் கவனம் படிப்பில் இருக்க வேண்டும்,” என, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி டில்லி பாபு, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை சார்பில், திருக்குறள் ஒப்புவித்தல், தமிழ் மரபு நடனப் போட்டி நேற்று தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் உள்ள மொய்து மஹாலில் நடந்தது.
விழாவை துவக்கிவைத்து அவர் பேசியதாவது:
தங்கவயல் எனக்கு மிகவும் பிடித்தமான, தமிழர் நிறைந்த நகரம். இங்கு நன்னுால் என்ற இலக்கண நுாலை தங்கவயலில்தான் பவணந்தி என்ற சித்தர் எழுதியதாக வரலாறு கூறுகிறது.
படிப்பில் கவனம்
நானும் துவக்க கல்வியை, தமிழில் தான் படித்தேன். வட சென்னையில் வசதியற்ற குடும்பத்தில் பிறந்தவன். வீட்டில் மின் விளக்கு கிடையாது; மண்ணெண்ணெய் விளக்கில் படித்தேன். படித்து என்ன பெரிதாக கிழிக்க போகிறாய் என சிலர் கேலி செய்தனர். ஆனால், நான் கிழித்து தான் படித்தேன்.
அரசு வழங்கிய கல்வி உதவித்தொகையால் படித்தேன். படிக்க படிக்கத் தான் அறிவு வளரும். முயற்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை. எம்.ஏ., இலக்கியம், பி.இ., – எம்.டெக்., – பி.ஹெச்.டி., படித்தேன். மாணவர்கள் விடா முயற்சி செய்து படியுங்கள். உங்கள் கவனம் படிப்பில் இருக்க வேண்டும்.
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், கொடூரமான கொரோனா வந்து தாக்கினாலும் திருக்குறளுக்கு அழிவே இல்லை என்பதை இங்குள்ள சிறுவர்கள் கூறும் திருக்குறளின் அறமே, அதன் பெருமையை காட்டுகிறது.
மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் பணியாற்றிய ராணுவத் துறையில் உள்ள டி.ஆர்.டி.ஓ.,வில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறேன். பல்வேறு சவால்களை அறிவியலில் சாதிக்க வேண்டி உள்ளது.
கர்நாடகாவுக்கு பெருமை
நமது நாட்டின் முதல் ராணுவ விமானம், கர்நாடக மாநிலத்தின் ஹெச்.ஏ.எல்., நிறுவனத்தில் தான் தயாரிக்கப்பட்டது. அதேபோல ஆளில்லாத விமானம், ஏவுகணைகள் ஆகியவை கர்நாடகாவில் தான் உருவாக்கப்பட்டன.
தற்போது தொழில்நுட்பம் பெருமளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆரம்பத்தில் செங்கல் அளவில் ஒரு கிலோ எடையில் மொபைல் போன்களை பயன்படுத்தினோம். இப்போது, உலகமே உள்ளங்கையில் வந்துவிட்டது.
தொழில்நுட்ப வளர்ச்சியில் நமது நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது. மாணவர்களால் எதுவும் முடியாது என்பது ஒன்றும் இல்லை. திறமையால் முடித்து காட்ட முடியும்.
போராட்டம் இல்லாமல் வாழ்க்கையில் யாரும் ஆட்டம் போட முடியாது. வாழ்க்கையின் வெற்றிகளை போராடித் தான் அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருக்குறளை ஆங்கிலத்தில் எழுதி தமிழில் ஒப்புவித்த மாணவர்கள்
* விழா மேடையில் திருவள்ளுவர், பாவேந்தர் பாரதிதாசன், தேவநேயப் பாவாணர் படங்கள் வைக்கப்பட்டிருந்தன* பள்ளி, கல்லுாரி மாணவ – மாணவியருக்கு திருக்குறள் ஒப்புவித்தல், தமிழ் மரபு நடனம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன* போட்டிகளில் 35 பள்ளி, கல்லுாரிகளில் இருந்து 250 மாணவ – மாணவியர் பங்கேற்றனர். மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்* தங்கவயலில் தமிழின் சிறப்பைப் போற்ற மழலையர் கொஞ்சிய தமிழின் திருவிழாவாக, வாழும் தமிழுக்கு கிடைத்த சான்றாக திகழ்ந்தது* தங்கவயலில் தமிழ் வழிக்கல்வி பள்ளிகளே இல்லை. ஆயினும் விழாவில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரின் தாய் மொழியும் தமிழே. இவர்கள் அனைவருமே ஆங்கில வழிக்கல்வி படிப்பவர்கள். திருக்குறளை, தங்களின் பெற்றோரின் வழிகாட்டுதலுடன் ஆங்கிலத்தில் எழுதி மனப்பாடம் செய்து ஒப்புவித்து சாதித்தனர்* மாணவர்கள் சோர்வு அடையாமல் இருக்க பிஸ்கெட், பாதாம் பால், மதிய உணவு வழங்கப்பட்டது* நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை 2016 முதல் கலை இலக்கிய விழா நடத்தி வருகின்றனர். நேற்று எட்டாம் ஆண்டு விழா நடத்தப்பட்டது* நிர்வாக குழு உறுப்பினர் சம்பத் வரவேற்றார். நிர்வாக குழு உறுப்பினர் கோவலன் தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை அமைப்பின் தலைவர் ஜெயசீலன் தலைமையில் பொதுச் செயலர் பிரதாப் குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் வேலாயுதம், அகஸ்டின், முருகன், இலங்கேஸ்வரன், தசரதன் ஆகியோர் செய்திருந்தனர்* தங்கவயல் தமிழ்ச்சங்கத்தலைவர் கலையரசன், செயல் தலைவர் கமல் முனிசாமி, கர்நாடக மாநில பள்ளி கல்லுாரி ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலர் கார்த்தியாயினி, பேராசிரியர் பிரான்சிஸ் போர்னியோ, டாக்டர் மொய்து புகாரி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்