”வெற்றி, தோல்வி அரசியலில் சகஜம். தோல்வியால் துவண்டுவிடக் கூடாது. தேர்தல் தோல்வி ஏமாற்றத்தை, பார்லிமென்டில் வெளிப்படுத்த வேண்டாம்,” என, எதிர்க்கட்சிகளை, பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், நேற்று முன்தினம் வெளியான நான்கு மாநில முடிவுகளில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜ., அபார வெற்றி பெற்றது. தெலுங்கானாவில், காங்கிரஸ் புதிய சாதனையுடன் வென்றது.
இந்நிலையில், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. வரும் 22ம் தேதி வரை கூட்டத் தொடர் நடக்க உள்ளது. கூட்டத் தொடர் துவங்கும் முன், பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
ஜனநாயகத்தின் கோவிலான பார்லிமென்ட், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் தளமாகும். வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் அஸ்திவாரத்தை வலுப்படுத்தக் கூடியது.
மக்கள் நம்பிக்கை
இங்கு, மசோதாக்கள் மீதும், பல பிரச்னைகள் குறித்தும் ஆரோக்கியமான விவாதங்கள் நடக்க வேண்டும். அனைத்து உறுப்பினர்களும், தங்களுடைய ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
விவாதங்கள் நடக்காவிட்டால், பார்லிமென்டின் மீதான மக்கள் நம்பிக்கை பாதிக்கப்படும்.
சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து கூற வேண்டுமானால், எதிர்க்கட்சிகள் தரப்பில் உள்ள நண்பர்களுக்கு இதைவிட சிறந்த பொன்னான வாய்ப்பு கிடைக்காது. தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட வெறுப்பை வெளிப்படுத்தாதீர்கள். தோல்வியில் இருந்து அவர்கள் பாடம் கற்க வேண்டும். கடந்த ஒன்பது ஆண்டுகளாக எதிர்மறையாக செயல்பட்டு வரும் பழக்கத்தை அவர்கள் கைவிட வேண்டும்.
இந்த கூட்டத் தொடரை, நேர்மறையான எண்ணத்துடன் அவர்கள் அணுகினால், அவர்கள் மீதான மக்களின் கண்ணோட்டம் நிச்சயமாக மாறும். இதற்கான கதவு தற்போது திறக்கப்பட்டுள்ளது.
அவர்கள் எதிர் வரிசையில் உள்ளனர். இருப்பினும் என்னுடைய அறிவுரைகளை வழங்க விரும்புகிறேன். அனைவருக்கும் வளமான, சிறந்த எதிர்காலம் உள்ளது.
எதிர்க்காதீர்கள்
நம்பிக்கையை இழக்காமல், தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட வெறுப்பை, பார்லிமென்டில் காட்டாமல் இருக்க வேண்டும். தேர்தல் முடிவுகளில் சில ஏமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அதை காட்ட வேண்டிய இடம் பார்லிமென்ட் அல்ல.
என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். நீங்கள் உங்களை சற்று மாற்றிக் கொள்ளுங்கள். எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்க்காதீர்கள்.
ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் கூறுங்கள், விமர்சனங்களை முன் வையுங்கள், விவாதங்களில் பங்கேற்று, அரசு தரப்பில் ஏதாவது குறை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.
இவ்வாறு செய்தால், உங்கள் மீது மக்களுக்கு உள்ள வெறுப்பு நிச்சயம் மாறும். ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிக்கும் முக்கியத்துவம் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
எதிர்மறையான எண்ணங்களை மக்கள் வெறுக்கின்றனர் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
வரும் 2047ல் நம் நாட்டை வளர்ந்த நாடாக உயர்த்த வேண்டும். அவ்வளவு காலத்துக்கு கூட நாம் காத்திருக்க வேண்டியதில்லை.
பார்லிமென்டில் சிறப்பான விவாதம் நடந்து, எதிர்மறையான எண்ணத்தை எதிர்க்கட்சிகள் கைவிட்டு, அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தால், அதற்கு முன்பாகவே அந்த இலக்கை அடைய முடியும்.
பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய நான்கு ஜாதியினருக்கு உரிய அதிகாரமளிக்கும் நோக்கத்துடன் செயல்படுவோருக்கு. மக்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்.
சிறந்த நிர்வாகம், மக்களின் ஆதரவு இருந்தால், அரசுக்கு எதிரான மனநிலை என்ற பேச்சுக்கே இடமிருக்காது. இதை நாங்கள் தொடர்ந்து உணர்த்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., – எம்.பி.,க்கள்
பின்னர் லோக்சபாவுக்குள் அனைவருக்கும் வணக்கம் கூறியபடியே பிரதமர் நரேந்திர மோடி நுழைந்தபோது, அங்கிருந்த பா.ஜ., – எம்.பி.,க்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.அப்போது, ‘மீண்டும் மீண்டும் மோடி அரசு தான்; மூன்றாம் முறையாகவும் மோடியின் அரசு தான்’ என, கோஷமிட்டனர். ஏழு நிமிடங்களுக்கு லோக்சபாவையே அதிர வைக்கும் அளவுக்கு பா.ஜ., – எம்.பி.,க்கள் கோஷமிட்டனர். மூத்த அமைச்சர்களுடன், இந்த காட்சிகளை ரசித்தபடியே பிரதமர் அமர்ந்து இருந்தார்.சபாநாயகர் ஓம் பிர்லா வந்து அமர்ந்ததும் அலுவல்கள் துவங்கின. அப்போது, பகுஜன் சமாஜ் எம்.பி., டேனிஷ் அலி, தான் அணிந்திருந்த உடைக்கு மேலே போஸ்டர்களை தொங்கவிட்டபடி கோஷங்கள் போட்டார்.பா.ஜ., – எம்.பி., பிதுாரி, தன்னை கடந்த கூட்டத் தொடரில் அவதுாறாக பேசியது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறியபடி, சபைக்குள் அங்குமிங்கும் நடந்து, டேனிஷ் அலி தன் எதிர்ப்பை தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக மேலும் சில எதிர்க்கட்சி எம்.பி.,க்களும், கோஷங்கள் போட்டனர். இதனால் சபை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.
வாய்ப்பை தவறவிட்ட வைகோ
இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து பேசுவதற்காக, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, ராஜ்ய சபாவில் அனுமதி கேட்டிருந்தார். பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை பேசும் நேரத்தில், வைகோவின் முறை வந்தபோது, அவரை பேசும்படி துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அழைத்தார். ஆனால், வைகோவால் அதை சரியாக கவனிக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் வைகோவை, ஹரிவன்ஷ் அழைத்து பார்த்தார்.”உங்களுக்கு பேச விருப்பம் இல்லையா?” என்று கூட, அவரை நோக்கி கேட்டார். அப்போதும்கூட வைகோ, அதை கவனிக்காமல் இருக்கவே, அடுத்த எம்.பி.,யை, துணைத் தலைவர் அழைத்தார். வைகோவுக்காக, தி.மு.க., – எம்.பி.,க்கள் வாதாடி பார்த்தும், மீண்டும் வாய்ப்பு கிடைக்காமலேயே போனது.
பல்கலை மசோதா தாக்கல்
மிக முக்கியமான மத்திய பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நிறைவேறுவதன் வாயிலாக, ‘சம்மக்கா சரக்கா மத்திய பழங்குடியின பல்கலைக்கழகம்’ என்ற பெயரில், தெலுங்கானா மாநிலம் முழுகு மாவட்டத்தில் புதிய மத்திய பல்கலைக்கழகம் அமைய வழி ஏற்பட்டுள்ளது. இதற்காக, 889 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
உரிமை குழு குறித்து அவதுாறாக கருத்து தெரிவித்தது, சபை விதிகளை மீறியது போன்ற குற்றம் செய்ததாக, ஆம் ஆத்மி எம்.பி., ராகவ் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஆக., 11ல் அவர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.இந்நிலையில், அவர் குற்றம் செய்ததாக, ஒழுங்கு நடவடிக்கை குழு நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, 115 நாட்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யும்படி, பா.ஜ.,வைச் சேர்ந்த நரசிம்ம ராவ் தீர்மானம் தாக்கல் செய்தார். அதை ஏற்று, சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்வதாக, ராஜ்யசபா தலைவர் தலைவர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார்.
– நமது டில்லி நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்