வாரணாசி: உத்தர பிரதேசத்தின் வாரணாசிக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள வரலாற்று, கலாசார இணைப்புகளை வெளிப்படுத்தும், இரண்டாவது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகள் இன்று துவங்குகின்றன. இதை வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
உத்தர பிரதேசத்தின் காசி, பனாரஸ் என்றழைக்கப்படும் வாரணாசிக்கும், தமிழகத்துக்கும் இடையே நீண்ட வரலாற்று, கலாசார பிணைப்பு உள்ளது. இதை வெளிப்படுத்தும் வகையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்தாண்டு நடத்தப்பட்டது.
இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, நாடு முழுதும் பல்வேறு நகரங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்நிலையில், இரண்டாவது ஆண்டாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகள், இன்று துவங்கி, 30ம் தேதி வரை நடைபெற உள்ளன.
சிறப்பு ரயில்
வாரணாசி லோக்சபா தொகுதியின் எம்.பி.,யான, பிரதமர் நரேந்திர மோடி, இதை இன்று துவக்கி வைக்கிறார். மேலும் கன்னியாகுமரி – வாரணாசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயில்களையும் அவர் துவக்கி வைக்கிறார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தமிழகத்தில் இருந்து, 1,400 பேர், தலா, 200 பேர் என, ஏழு சிறப்பு ரயில்களில் வரவுள்ளனர். சென்னை, கோவை, கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதில் பங்கேற்க, 42,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் இருந்து, 1,400 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாரணாசியைத் தவிர, உத்தர பிரதேசத்தின் அயோத்தி, பிரயாக்ராஜ் உள்ளிட்ட பகுதிகளையும் சுற்றி பார்ப்பர்.
இரண்டாவது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், கலாசார பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் கருத்தரங்குகள், கவியரங்குகள், கலந்துரையாடல் என, பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இவற்றை தவிர, சிறப்பு கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என, பல தரப்பினரும் இதில் பங்கேற்க உள்ளனர்.
பொறுப்பு
இந்த நிகழ்ச்சிகளை நடத்தும் பொறுப்பு, மத்திய கல்வி அமைச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கலாசாரம், சுற்றுலா, ரயில்வே என பல துறைகளும், பல்வேறு அரசு அமைப்புகளும், உத்தர பிரதேச அரசும் இதில் இணைந்துள்ளன.
தமிழகத்தின், சென்னை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம் மற்றும் உத்தர பிரதேசத்தின் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கும், இந்த நிகழ்ச்சிகளை செயல்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிறு நகரங்கள் வளர்ச்சி: பிரதமர் வலியுறுத்தல்
மத்திய அரசின் திட்டங்களின் பலன்களை நாடு முழுதும் விளக்கும் வகையில், ‘வளர்ச்சியடைந்த இந்தியா உறுதியேற்பு யாத்திரை’ நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் நடக்கும் இந்த யாத்திரையில், மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் வடகிழக்கு மாநிலமான மிசோரமில், இந்த யாத்திரையை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.’வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பயனாளிகள் இடையே அவர் பேசியதாவது:நாட்டை வளர்ந்த நாடாக்க வேண்டும் என்ற உறுதியுடன், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், மோடியின் உறுதிமொழி வாகனம் பயணித்து வருகிறது. பெருநகரங்களின் வளர்ச்சியில் மட்டுமே இதற்கு முக்கியத்துவம் தரப்பட்டது. சிறு நகரங்கள் வளர்ச்சி அடைந்தால்தான், நாடு வளர்ச்சி அடையும். அதை முன்வைத்தே மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என, அனைத்து தரப்பினரின் வளர்ச்சியை முன்னிறுத்தி இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மற்றவர்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். மோடியின் உறுதிமொழியையே நம்புகின்றனர்.ஒரு குடும்ப உறுப்பினர்போல, உங்கள் அனைவருக்கும் உதவிட இந்த அரசு காத்திருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்