பெங்களூரு, : உத்தர பிரதேசத்தில் நடந்த விழாவில், மேற்கு வங்கம் மால்டா நகரம் – பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா நிலையம் இடையிலான ரயில் உட்பட இரண்டு அதிவேக அமிர்த பாரத் ரயில் சேவைகளை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். கோவை – பெங்களூரு, மங்களூரு – கோவா இடையிலான ரயில்கள் உட்பட ஆறு வந்தே பாரத் ரயில் சேவைகளும் துவக்கி வைக்கப்பட்டன.
உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ராமர் கோவில் கலாசார மையமாக மாற்றப்பட உள்ளதால், சுற்றுலா பயணியரை கவரும் வகையில் அங்குள்ள ரயில் நிலையம் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி புதிய சர்வதேச விமான நிலையமும் கட்டப்பட்டுள்ளது.
மலர்கள் துாவி வரவேற்பு
இதன் திறப்பு விழாவில் பங்கேற்க நேற்று அயோத்தி சென்ற பிரதமர் நரேந்திர மோடியை உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்துக்கு சாலை வழியாக சென்ற பிரதமருக்கு, இருபுறமும் கூடியிருந்த மக்கள் மலர்களை துாவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பதிலுக்கு பிரதமரும் காரின் கதவை திறந்து கைககளை அசைத்தபடி சென்றார்.
பின்னர், 240 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ள அயோத்தி தாம் ரயில் நிலையத்தை மோடி துவக்கி வைத்தார்.
அப்போது, பீஹாரின் தர்பாங்காவில் இருந்து அயோத்தி வழியாக புதுடில்லியின் ஆனந்த் விஹார் செல்லும் அதிவேக பயணியர் ரயிலான அமிர்த பாரத் ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மற்றொரு அமிர்த பாரத் ரயிலான மேற்கு வங்கம் மால்டா நகரம் – பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா நிலையம் இடையிலான சேவையையும் அவர் துவக்கி வைத்தார்.
மேலும், ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா – புதுடில்லி, அமிர்தசரஸ் – புதுடில்லி, கோவை – பெங்களூரு, ஜல்னா – மும்பை, அயோத்தி – ஆனந்த் விஹார், மங்களூரு – மடகாவ் இடையிலான புதிய ஆறு வந்தே பாரத் ரயில் சேவைகளையும் காணொளி வாயிலாக பிரதமர் துவக்கி வைத்தார்.
மேலும், ரயில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த 2,300 கோடி ரூபாய் மதிப்புள்ள ரயில்வே திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பின்னர், அயோத்தியில் 1,450 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்பட்ட புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
மொத்தம் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ள ராமரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஓவியங்களை பிரதமர் ரசித்து பார்த்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்கள் சுலபமாக செல்லும் வகையில் நான்கு சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. ராம பாதை, பக்தி பாதை, தர்ம பாதை, ஸ்ரீ ராமஜென்ம பூமி பாதை ஆகியவற்றையும் பிரதமர் நேற்று திறந்து வைத்தார்.
கர்நாடகாவில், சென்னை – மைசூரு, காச்சிகுடா – யஷ்வந்த்பூர், பெலகாவி – கே.எஸ்.ஆர்., பெங்களூரு, ஆகிய நகரங்களுக்கு இடையே, மூன்று ‘வந்தே பாரத்’ விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதற்கிடையில், கோவை – பெங்களூரு கன்டோன்மென்ட், மங்களூரு – மடகாவ் நகரங்களுக்கு இடையே ‘வந்தே பாரத்’ ரயில் சேவை துவக்கி இருப்பதன் மூலம், கர்நாடகாவுக்கு மொத்தம் ஐந்து ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்குவது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்