தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள் – இத்தனை சம்பவங்கள் இந்த ஒரே நாளில் நடந்தவையா?

தமிழ் கடவுளான, வெற்றி வேலவன் முருகனுக்குக் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தைப்பூசம் மிக முக்கியமான ஒன்று. தைப்பூசம் என்பது தை மாதம் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளில் முருகப்பெருமானின் அருள் பெற விரதமிருந்து வழிபடும் விழாவாகும்.

இந்த நன்னாளில் வெற்றிப் பொருநனை வழிபடும் பக்தர்கள் கல்வி, செல்வம், ஞானம் என்ற மூன்றிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதிகம். முருகப்பெருமானுக்கு உகந்த நாளான இந்த தைப் பூச திருநாளில் முருகர்கோயில்களுக்குப் பாதயாத்திரை செல்வது, காவடி எடுப்பது, அலகு குத்துவது போன்ற நேர்த்திக்கடன்களைச் செய்வது வழக்கம்.

‘பூசம் புண்ணியம் தரும்!’

இந்தியா மட்டுமின்றி உலகில் தென்னிந்தியர்கள் வாழும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், தென்ஆப்பிரிக்கா, பிஜி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் போன்றே மலேசியாவிலும் தைப்பூசதினத்தன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட தைப்பூச தின வரலாற்று சிறப்புகள் சிலவற்றைக் காண்போம்.

தைப்பூச நன்னாளில்தான் உலகில் முதன்முதலில் நீரும், நீரிலிருந்து உலக உயிரினமும் தோன்றியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. அதனாலேயே இந்நாளில் பல்வேறு ஆலயங்களில் தெப்ப திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

முருகப்பெருமானுக்கு சூரனை வதம் செய்ய பார்வதி தேவி தன் சக்தி முழுவதையும் கொண்டு உருவாக்கிய பிரம்ம வித்யா என்ற வேல்-ஐ வழங்கி அருளிய நாள் இது.

முருகப்பெருமான் வள்ளி பிராட்டியை தைப்பூச நன்னாளில்தான் மணந்து கொண்டார் என்பது நம்பிக்கை.

தைப்பூச தினத்தன்று விரதம் இருப்பது வழக்கம். அன்று புதிதாகச் சமைத்த உணவுகளைத்தான் உட்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம். “பூசத்தன்று பூனைக் கூட பழையதை உண்ணாது” என்ற பழமொழியும் உள்ளது.

தைப்பூசக் கோயில்கள்

தைப்பூச தினத்தன்று நடைப்பயணமாக பழனி முருகனுக்கு காவடி எடுத்துவந்த பக்தர்கள் பாடிய பாடல்களே பிரபலமான காவடி சிந்து பாடல்களாகும்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் ரங்கநாத பெருமாள் தன் தங்கையான சமயபுரத்து அம்மனுக்கு தைப்பூச நன்னாளில் காவிரி கரையில் சீர்வரிசைகள் கொடுப்பார். இதை ஒட்டி சமயபுரத்தில் பத்து நாள்கள் திருவிழா நடைபெறும்.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய வள்ளலார், தைப்பூச நாளில்தான் ஜோதியாக மாறி இறைவனடி சேர்ந்தார். வழக்கமாக ஆறு திரைகளை நீக்கிக் காண்பிக்கப்படும் ஜோதி தரிசனம், தைப்பூச தினத்தன்று ஏழு திரைகளையும் அகற்றி முழுமையான ஜோதி தரிசனத்திற்கு வழிவகை செய்வார்கள்.

வஜன், வருகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் தோஷங்கள் தீர திருவிடைமருதூர் கோயிலில் உள்ள புனித தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. இக்கோயிலிலுள்ள அசுவமேதப் பிரகாரத்தை சுற்றி வந்தால் பரமஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

நெல்லையில் உள்ள தாமிரபரணி நதிக்கரையோரத்தில் நெல்லையப்பரை நினைத்து தவமிருந்த காந்திமதியம்மன், தைப்பூச நாளில்தான் நெல்லையப்பரின் அருளைப் பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன.

காவடி பக்தர்கள்

திருச்சேறை திருத்தலத்தில் காவிரி ஆனவள் ஸ்ரீமன் நாராயண பெருமாளை நோக்கி தவம் இருந்தார். அவளது தவத்தால் மகிழ்ந்த நாராயண பெருமாள் அவருக்கு தைப்பூச நன்னாளில்தான் காட்சியளித்து அருளியதாக புராணங்கள் கூறுகின்றன.

மயிலம் கோயிலில் தைப்பூச தினத்தன்று முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி மலைமீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியை காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது.

திருவிடைமருதூர் காவிரியின் படித்துறைக்கு பூசத்துறை, கல்யாண தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. தைப்பூசதில் ஈசனும், சக்தியும் ரிஷப வாகனத்தில் இந்தப் படித்துறைக்கு வந்து, தீர்த்தவாரி செய்து வீதி வழி உலா வந்து ஆலயம் செல்வார்கள். இந்தக் காட்சியை காண்பவர்க்கு கல்யாண வரம் உடனே கிட்டும் என்பார்கள்.

தைப்பூச நன்னாளில்தான் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணை அவரது அஸ்தி கலத்திலிருந்து பதிகம் பாடி திருஞானசம்பர் உயிர்ப்பித்தார் என்று புராணம் கூறுகிறது.

முருகப் பெருமான், வள்ளி பிராட்டியை திருமணம் செய்துக் கொண்டதால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் முருகப்பெருமான் காட்சியளித்தாராம்.

முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் தைப்பூசத்தன்று பழனியில் கொண்டாடப்படுகிறது.

குளித்தலை கடம்பவன நாதர் தலத்தில் தைப்பூச நாளில்தான் சப்த கன்னியருக்கு ஈசன் காட்சி அளித்து வரங்கள் அளித்தார் எனக் புராணங்கள் கூறுகின்றன.

தைப்பூச தரிசனம்

இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்திற்கு வந்து தங்கி, அலாதி திருப்பணிகளை மேற்கொண்டு வந்தான். தைப்பூச திருநாளில்தான் இரணியன் நடராஜ பெருமானை நேருக்கு நேர் சந்தித்து அருள் பெற்றதாக தில்லை புராணம் குறிப்பிடுகின்றது.

தில்லையில் நடராஜர் நடனமாடி காட்சியருள வேண்டுமென தவமிருந்து வியாக்ரபாதர், பதஞ்சலி, ஜைமினி போன்ற  முனிவர்களின் தவத்தை ஏற்று தைப்பூச தினத்தன்றுதான் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடி மகிழ்வித்தார் என்று வரலாறு குறிப்பிடுகிறது.

இந்த நாளில் கொங்கு மண்டலத்தில் உள்ள மக்கள் பலரும் கொடுமுடியில் உள்ள காவிரி ஆற்றின் தீர்த்தத்தை எடுத்துத் தீர்த்தக்காவடியாக முருக ஆலயங்களுக்குக் கொண்டு செல்வதை வழக்கமாகக் வைத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.