சென்னை: விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்குபாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையும், வேளாண் விஞ்ஞானியுமான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கு வாழ்த்து தெரிவித்து ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் தருகிறது. சுயசார்பு பாரதத்தைக் கட்டமைக்க நமது தேசத்தின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலனுக்காக சுவாமிநாதன் ஆற்றிய மகத்தான பங்களிப்புகளுக்கு, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அங்கீகாரம் இது. இந்தக் கனவை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: எம்.எஸ்.சுவாமிநாதன், இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்தின் தாக்கத்தைக் கண்டு மனம் வருந்தி, நாட்டு மக்களுக்கு போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். தற்போது உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்திருக்க எம்.எஸ்.சுவாமிநாதன் மிக முக்கியக் காரணம். அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது.
பாமக நிறுவனர் ராமதாஸ்: இந்தியா உணவுப் பஞ்சத்தில் தவித்தபோது பசுமைப் புரட்சியை முன் நின்று நடத்தி நாட்டின் உணவு உற்பத்தியை பெருக்கிய பெருமை எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு உண்டு. அவரது உழைப்புக்கும், தொண்டுக்கும் ‘பாரத ரத்னா’ விருது சிறந்த அங்கீகாரமாகும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: வேளாண் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த, இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையான எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘பாரத ரத்னா’ வழங்கப்படுவது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலை மாறி, வேளாண் பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையைஉருவாக்கிய விஞ்ஞானி சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
ஐஜேகே பொதுச் செயலாளர் பி.ஜெயசீலன்: இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது, குறைந்த அளவு நீரைக்கொண்டு, அதிக மகசூலை ஈட்டக்கூடிய புதிய ரக உணவுப் பயிர்களை அறிமுகப்படுத்தி, பசுமை புரட்சி உண்டாக்கியவர் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன். அவருக்கு பாரத ரத்னா விருதை அறிவித்து, அவரது தன்னலமற்ற சேவையை உலகம் அறியச்செய்த மத்திய அரசுக்கு நன்றி.
உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானியும், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவருமான சவுமியா சாமிநாதன்: மறைந்த எனது தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதற்காக இந்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எனது நன்றி. உணவு, ஊட்டச்சத்துப் பிரச்சினையை தீர்ப்பதற்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, அவர் ஆற்றியபணிக்கு இது மிகப் பெரிய அங்கீகாரமாகும். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆயிரக்கணக்கான இளம் விஞ்ஞானிகளுக்கும் வழிகாட்டியாக இருந்தவர். சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர். அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டினால், சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும்.