மங்களூரு, கர்நாடகாவில், கல்லுாரிக்குள் புகுந்து மூன்று மாணவியர் மீது, ஆசிட் வீசிய கேரளாவை சேர்ந்த மாணவர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு நடந்து வருகிறது. இது, தமிழகத்தில் நடக்கும் பிளஸ் 2 பொது தேர்வு போன்றதாகும்.
நேற்று கணிதத் தேர்வு நடந்தது. தட்சிண கன்னடா மாவட்டம், கடபா டவுனில் அரசு பி.யு.சி., கல்லுாரி மாணவ – மாணவியர் நேற்று காலை தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்தனர்.
கவலைக்கிடம்
கல்லுாரி வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தின் பீடத்தில் அமர்ந்து மூன்று மாணவியர் படித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது, மாணவியர் அருகே வந்த ஒரு வாலிபர், திடீரென அந்த மாணவியரில் ஒருவரது முகத்தில் ஆசிட் வீசினார். அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். பக்கத்தில் அமர்ந்திருந்த இரண்டு மாணவியர், அவரை காப்பாற்ற முயன்றனர். அவர்கள் மீதும், ஆசிட் வீசி விட்டு வாலிபர் தப்ப முயன்றார்.
அதிர்ச்சி அடைந்த சக மாணவ – மாணவியர் வாலிபரை மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். மூன்று மாணவியரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு மாணவியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த கல்லுாரிக்கு எஸ்.பி., ரிஷ்யந்த் சென்று விசாரித்தார். பின், அவர் கூறியதாவது:
ஆசிட் வீசியவர், கேரளாவின் மலப்புரம் மாவட்டம், நிலம்பூரை சேர்ந்த அபின், 23. அங்குள்ள கல்லுாரியில் எம்.பி.ஏ., படிக்கிறார். ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த மாணவியும் கேரளா தான். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
மாணவி தாயின் சொந்த ஊர் நிலம்பூர். இதனால், மாணவி அங்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, மாணவிக்கும், அபினுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவியை அபின் காதலித்துள்ளார்.
விசாரணை
ஆனால், அவரது காதலை ஏற்க மாணவியை மறுத்து விட்டார். அந்த கோபத்தில், மாணவி மீது ஆசிட் வீசி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வேறு காரணம் உள்ளதா என்றும், விசாரணை நடக்கிறது. மாணவி முகத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. மற்ற இரண்டு மாணவியருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டு உள்ளது.
கல்லுாரி சீருடை அணிந்தே, அபின் கல்லுாரி வளாகத்துக்குள் நுழைந்து உள்ளார். அவருக்கு கல்லுாரி சீருடை கொடுத்தது யார் என்றும், விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்