நட்சத்திர வீரர் விராட் கோலி, 2024 டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்ற பின்னர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறினார். இதனால் இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விராட் கோலி விளையாடுவார். இந்த நிலையில், விராட் கோலியின் ஐசிசி டி20 தரவரிசை புள்ளிகள் உயர்ந்துள்ளது. இது ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளது. ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர் எப்படி ஐசிசி தரவரிசை புள்ளிகள் உயரும்? இது எப்படி சாத்தியம்?
கடந்த 4 மாதங்களாக விளையாடவில்லை
விராட் கோலி, இதற்கு முன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஐசிசி தரவரிசையில் 900 புள்ளிகளை பெற்று இருக்கிறார். டி20ல் அதிகபட்சமாக அவர் 897 புள்ளிகளை பெற்று இருந்தார். இதனிடையே அவர் ஓய்வு அறிவித்து கடந்த 4 மாதங்களாக எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்த நிலையில், ஐசிசி டி20 தரவரிசை புள்ளிகள் உயர்ந்துள்ளது. சமீபத்தில் ஐசிசி டி20 தரவரிசை புள்ளிகளை திருத்தியது. அதன்படி விராட் கோலியின் அதிகபட்ச டி20 தரவரிசை புள்ளிகளை 897ல் இருந்து 909ஆக திருத்தி உள்ளது.
இதன் மூலம் விராட் கோலி எவரும் செய்திராத மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த திருத்தப்பணியானது ஐசிசியின் வழக்கமான ஒன்றாகும். கடந்த கால போட்டிகளின் செயல்பாடுகளை வைத்து வீரரின் தரவரிசை புள்ளிகளை சரி செய்வார்கள். மறுமதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு வீரர்கள் தரவரிசை புள்ளிகள் குறையவும் செய்யலாம் அதிகரிக்கவும் செய்யலாம். இந்த சூழலில் விராட் கோலியின் தரவரிசை புள்ளிகள் அதிகரித்துள்ளது.
மாபெரும் சாதனை
இந்த நிலையில், விராட் கோலி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என மூன்று வடிவிலும் 900 புள்ளிகளை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த திருத்ததிற்கு பின்னர் விராட் கோலியின் டி20 சர்வதேச தரவரிசை புள்ளிகள் 909ஆக உயர்ந்துள்ளது. விராட் கோலி கடந்த ஓராண்டாக டி20 போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி 123 டெஸ்ட் போட்டிகளில் 9230 ரன்கள் அடித்துள்ளார். அவரது சராசரி 46.85ஆக உள்ளது. 302 ஒருநாள் போட்டிகளில் 14,161 ரன்களை அடித்து 57.88 சராசரியுடன் உள்ளார். அதேபோல் டி20 கிரிக்கெட்டில் அவர் 125 போட்டிகளில் விளையாடி 4188 ரன்களுடன் 48.69 சராசரியை வைத்துள்ளார். மேலும், மூன்று வடிவிலும் சதம் அடித்த வீரர்களில் விராட் கோலியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: IPL 2026: சிஎஸ்கே கழட்டிவிடும் 4 வீரர்கள்.. புதிதாக யாருக்கு வாய்ப்பு!
மேலும் படிங்க: Test: அதிக முறை பேட்டர்களை டக்-அவுட்டாக்கிய டாப் 10 பௌலர்கள்!