கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ். இவரது அதிரடி ஆட்டத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு உண்டு. ரசிகர்கள் இவரை ‘மிஸ்டர் 360’ என்றழைப்பர். அந்த அளவுக்கு மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிக்சர் அடிக்கும் திறமை படைத்தவர். விளையாடிய கால கட்டங்களில் ஏராளமான சாதனைகள் படைத்த இவர், 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
இதனையடுத்து ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். அதிலும் கடந்த 2021-ம் ஆண்டோடு விடை பெற்றார். அதன் பின் எந்த வித போட்டிகளிலும் விளையாடவில்லை. ஐ.பி.எல். தொடரில் ஆர்சிபி அணியில் விளையாடியதன் மூலம் இந்தியாவில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஏபி டி வில்லியர்சிடம் 21-ம் நூற்றாண்டின் டாப் 10 ஒருநாள் பேட்ஸ்மேன்களின் தரவரிசையை பட்டியலிடுமாறு கேட்கப்பட்டது. இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மொயீன் அலி மற்றும் அடில் ரஷீத் இணைந்து நடத்தும் ‘பியர்ட் பிபோர் விக்கெட்’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அடுத்து யார் வருவார்கள் என்று தெரியாமல் ஒவ்வொரு பேட்ஸ்மேனையும் ஒன்று முதல் பத்து வரை தரவரிசைப்படுத்துமாறு அவரிடம் கேட்கப்பட்டது.
அதில் முதல் நபராக சச்சினின் பெயர் கேட்கப்பட்டது. அவரை 4-வது இடத்தில் டி வில்லியர்ஸ் பட்டியலிட்டார். இதனையடுத்து ஒவ்வொரு வீரர்களின் பெயராக கேட்கப்பட்டது. அதில் விராட் கோலிக்கு முதலிடத்தை ஒதுக்கிய அவர், தன்னை 2-வது இடத்தில் வைத்தார். அதுபோக ரோகித் மற்றும் தோனியை 6, 7-வது இடத்தில் வைத்தார்.
ஏபி டி வில்லியர்ஸ் பட்டியலிட்ட 21-ம் நூற்றாண்டின் டாப் 10 ஒருநாள் பேட்ஸ்மேன்கள்:
1. விராட் கோலி
2. ஏபி டி வில்லியர்ஸ்
3. ரிக்கி பாண்டிங்
4. சச்சின்
5. அம்லா
6. ரோகித் சர்மா
7. மகேந்திரசிங் தோனி
8. குமார் சங்கக்கரா
9. பாபர் அசாம்
10. டேவிட் வார்னர்