திருவனந்தபுரம்: டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மும்பை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதற்கு தார்மீக பொறுப்பேற்று அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்தார்.
ஆனால், இந்த சம்பவம் நாட்டின் தலைநகரில் நடந்துள்ளது, மும்பையில் அல்ல. இது மிக மோசமான பாதுகாப்பு குறைபாடு. நாடாளுமன்றத்தில் பேசும்போதெல்லாம், எங்கள் ஆட்சியில் கலவரங்கள் இல்லை, குண்டு வெடிப்புகள் இல்லை, அனைத்தில் இருந்தும் நாட்டை விடுவித்துள்ளோம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுவார்.
தற்போது அவரது கண்களுக்கு முன்னால், அவரது அலுவலகத்துக்கு மிக அருகில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே, இதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும். குண்டுவெடிப்பு தொடர்பாக தெளிவான, முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். விசாரணையின் மூலம் தெரிய வரும் குண்டுவெடிப்புக்கான உண்மையான காரணங்கள் நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.” என தெரிவித்தார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.சி. வேணுகோபால், “ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்ன தெரிவித்தன. காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, பாஜக ஆட்சிக்கு வந்தது. அதை எதிர்த்து நாங்கள் தற்போது போராடுகிறோம். அது வேறு விஷயம். எனவே, தேர்தல் முடிவுகள் வரும் வரை பொருத்திருப்போம்.” எனத் தெரிவித்தார்.