Doctor Vikatan: 34 வயது நண்பனின் சார்பாக இந்தக் கேள்வியை எழுப்புகிறேன். அவனுக்கு சமீபத்தில்தான் திருமணமானது. வழக்கமாக பெரும்பாலான ஆண்களுக்கும், நீண்ட நேரம் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியவில்லை என்பதுதான் பிரச்னையாக இருக்கும். என் நண்பனுக்கோ, நீண்ட நேரம் உறவில் ஈடுபடுவதுதான் பிரச்னையே… திருமணமான சில நாள்களிலேயே இதனால் அவனுக்கும் அவனின் மனைவிக்கும் பிரச்னை வந்துள்ளது. நண்பனுடைய பிரச்னை இயல்பானதா… அதற்கு சிகிச்சை ஏதும் தேவையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த , காக்னிட்டிவ் பிஹேவியரல் மற்றும் செக்ஸ் தெரபிஸ்ட் சுனிதா மேனன்.

‘ஆண்களின் பாலியல் பிரச்னைகளில் ‘மேல் ஆர்கசமிக் டிஸ்ஆர்டர்’ (Male orgasmic disorder) என ஒன்று இருக்கிறது. டிலேடு இஜாகுலேஷன் (Delayed ejaculation) என்றும் இதைக் குறிப்பிடலாம். அதாவது, பாலியல் உறவின்போது உச்சக்கட்டத்தை எட்டுவதில் அல்லது விந்து வெளியேற்றுவதில் ஏற்படும் தாமதத்தைக் குறிக்கும் பிரச்னை இது. எவ்வளவு நேர தாமதம் இயல்பானது என்பதுதான் இங்கே கேள்வியே.
சில ஆண்களுக்கு நீண்டநேரம் உறவில் ஈடுபடுவது என்பது ஒருவித ‘கெத்து’ ஃபீலிங்கை, திருப்தியைத் தரும். அதுவே. சில ஆண்களுக்கு முடிந்தும் முடியாமல் தொடரும் செக்ஸ் உறவு ஒருவித விரக்தியை, மன அழுத்தத்தைக் கொடுக்கும்.

செக்ஸ் உறவில் நீண்ட நேரம் ஈடுபடுவதை வைத்து, சம்பந்தப்பட்ட ஆணுக்கு ‘மேல் ஆர்கசமிக் டிஸ்ஆர்டர்’ பாதிப்பு இருப்பதாக முடிவுக்கு வந்துவிட முடியாது.
விந்தை வெளியேற்ற முடியாத நிலையும், அது தரும் விரக்தியும், அந்த ஆணை மனத்தளவிலும் பாதிக்கும்போது அவருக்கு ‘மேல் ஆர்கசமிக் டிஸ்ஆர்டர்’ பிரச்னை இருக்கலாமோ என சந்தேகிக்கலாம். மக்கள்தொகையில் 8 சதவிகித ஆண்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கலாம் என்கின்றன புள்ளிவிவரங்கள்.
டிலேடு இஜாகுலேஷன் பிரச்னையோடு வரும் ஆண்களுக்கு முதலில் மருத்துவ ரீதியான பிரச்னைகள் உள்ளனவா என்று பார்க்கப்படும். உதாரணத்துக்கு, தைராய்டு பாதிப்பு, நரம்பியல் பாதிப்பு, முதுகுத்தண்டில் அடிபட்டதன் விளைவு என ஏதேனும் இருக்கிறதா என்று மருத்துவர்கள் கேட்டறிவார்கள்.
அப்படி எந்தப் பிரச்னை இல்லாதபட்சத்தில் அந்த ஆணை, செக்ஸ் தெரபிஸ்ட்டை சந்திக்க அனுப்புவார்கள். மன அழுத்தத்தைக் கையாளவும் கற்றுத் தரப்படும்.

செக்ஸ் தெரபிஸ்ட்டை அணுகும்போது, சம்பந்தப்பட்ட ஆணின் உளவியல் பிரச்னைகள் கேட்டறியப்படும். உறவு வைத்துக்கொள்ளும் நிலை, இடம் போன்றவை கேட்கப்படும். மனைவியின் மனநிலையும் உடல்வலியும் புரியவைக்கப்படும்.
தொடர் கவுன்சலிங் மூலம் அவர்களை இயல்புநிலைக்குக் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எனவே, உங்கள் நண்பரை பாலியல் மருத்துவரையோ, செக்ஸ் தெரபிஸ்ட்டையோ அணுகி ஆலோசனை பெறச் சொல்லுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.