5 நிர்பயா குற்றவாளிகள் உள்பட 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்தார் ஜனாதிபதி

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவடைய உள்ளது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 18ம் தேதி நடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் ராம்நாத் கோவிந்த் 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜகத்ராய். இவர் ராம்பூர் ஷியாம் சந்திரா கிராமத்தை சேர்ந்த விஜயேந்திர மகோத்தா மனைவி மற்றும் 5 குழந்தைகளை வீட்டுக்கு தீ வைத்து உயிரோடு எரித்து கொன்றார். கடந்த 2006-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக ஜகத் ராய் கைது செய்யப்பட்டார். அவருக்கு 2013, செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. அவர், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். அந்த மனுவை, முதன் முதலாக ராம்நாத் கோவிந்த் பதவிக்கு வந்ததும் நிராகரித்தார். இதன் தொடர்ச்சியாக நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் கருணை மனுக்களை கடந்த 2020-ம் ஆண்டு நிராகரித்தார். 2012-ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஓடும் பஸ்சில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முகேஷ்சிங், வினய் சர்மா, அக்‌ஷய்குமார் சிங், பவன்குப்தா உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியாக இருந்த ராம்சிங் விரைவு கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது திகார் ஜெயிலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்ற 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் 5 பேரும் தனித்தனியாக ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பினர். இந்த மனுக்களையும் 2020-ம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். கடைசியாக 2006-ம் ஆண்டு தூக்கு தண்டனை பெற்ற சஞ்சய் என்பவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டது. கடந்த 2012 முதல் 2017 வரை ஜனாதிபதியாக பதவி வகித்த பிரணாப் முகர்ஜி மொத்தம் 30 கருணை மனுக்களை நிராகரித்தார். 1987 முதல் 1992 வரை ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் 45 கருணை மனுக்களை நிராகரித்தார். அவருக்கு அடுத்தபடியாக பிரணாப் முகர்ஜிதான் அதிக மனுக்களை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் 2 மனுக்களையும், இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் 5 கருணை மனுக்களையும் நிராகரித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.