கோலிவுட் ஸ்பைடர்: அஜித் 61 பட நாயகி இவர்தான்; 2025-ல் விஜய்யின் மகன் என்ட்ரி; பாலிவுட்டில் நயன்தாரா!

இலங்கை கிரிக்கெட் முரளிதரன் வாழ்க்கையை படமாக்க முயன்று அதில் விஜய் சேதுபதி நடிக்க முன்வந்தபோது, நிறைய எதிர்ப்பு கிளம்பியது. அதை ஆக்ரோஷமாக முன்னிருந்து நடத்தினார் சீமான். அதனால் விஜய் சேதுபதிக்கும் சீமானுக்கும் பனிப்போர் நடந்துக் கொண்டிருந்தது. இப்போது சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படத்தை சீமானிடம் போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கும், சீமானுக்கும் இடையே சந்திப்பு நடக்க, இரண்டு பேருக்கும் இடையில் தற்போது சமாதானம் ஆகிவிட்டது என்கிறார்கள்.

விஜய் சேதுபதி

விஜய்யின் மகன் லண்டனில் படித்து முடித்துவிட்டு திரும்பிவிட்டார். அவரை எப்படியும் சினிமாவில் கொண்டுவந்துவிட எல்லோரும் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், விஜய் முடிவை மகன் பக்கமே திருப்பி விட்டுவிட்டார். சீக்கிரம் சண்டைப்பயிற்சி, டான்ஸ் பயிற்சி தொடங்கப் போகிறார்கள். அதற்கெல்லாம் முன்பாக சிறப்பான உலகப்படங்களை போட்டுப் பார்த்துக் கொண்டு இருப்பதில் மகன் ஆர்வமாக இருப்பதை பார்த்து, விஜய்க்கு சந்தோஷம். 2025ல் கண்டிப்பாக விஜய்யின் மகனின் என்ட்ரி இருக்கும் என்பது மட்டும் உறுதியாகிவிட்டது. அதேபோல் விக்ரம் மகன் துருவ்வும், சஞ்சய்யும் அடிக்கடி சேர்ந்து காணப்படுகிறார்கள். இவர்களுக்கு இடையில் இருக்கும் இன்னொரு நபர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன். இது புதுக் கூட்டணி!

ரஜினியை இயக்கும் வாய்ப்பு கண்டிப்பாக தனக்குக் கிடைத்து விடும் என்று நம்பிக் கொண்டிருந்தார் இயக்குநர் தேசிங் பெரியசாமி. நடுவில் அவ்வப்போது தேசிங்கு பெரியசாமியிடம் ரஜினி போன் செய்து அந்தக் கதையை வேறு எந்த ஹீரோக்களிடமும் சொல்லி விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதும் ஒரு காரணம். அதனால் கதையைப்பற்றி கேட்ட மற்ற ஹுரோக்களிடமும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று சொல்லி வந்தார் இயக்குநர். ஆனால், இப்போது நெல்சனுக்கு இந்த வாய்ப்பு போய்விட்டதில் கொஞ்சம் மனம் தளர்ந்து போய்விட்டார் தேசிங்கு பெரியசாமி. இப்போதுதான் மனம் லேசாகி மற்ற ஹீரோக்களிடம் கதையை கொண்டு போகப் போகிறார். நீண்ட காத்திருப்புதான்!

டோலிவுட் நடிகர்கள்

டோலிவுட் பட உலகில் திரையரங்கில் டிக்கெட் கட்டண குறைப்பு உள்பட தெலுங்குத் திரையுலகின் வளர்ச்சியை இன்னும் அதிகரிக்கும் வண்ணம் பல கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னனி ஹீரோக்கள் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, பிரபாஸ், இயக்குநர் ராஜமௌலி, கோரட்டலா சிவா உள்பட பலர் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டியை சந்தித்துள்ளனர். ஆனால், தமிழ் திரையுலகில் சினிமா டிக்கெட்டின் விலை, கேன்டீன், பார்க்கிங்கில் நடக்கும் பகல்கொள்ளையை யாரும் தட்டிக்கேட்பத்தில்லை. இதனால்தான் சின்ன பட்ஜெட் படங்கள் தியேட்டர்களில் வெளியானால் கூட, அதிகமான டிக்கெட் கட்டணத்தினால் மக்கள் கூட்டம் தியேட்டர்களுக்கு வருவதில்லை. எனவே இங்குள்ள டாப் ஹீரோக்கள், இயக்குநர்கள் முதல்வரைச் சந்திக்க வேண்டும் என கோடம்பாக்கத்தில் குரல்கள் கேட்கின்றன.

லோகேஷ் கனகராஜ் இப்போது கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசிலை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இம்மாதத்துடன் அதன் படப்பிடிப்பு நிறைவடைகிறது. இதற்கிடையே அல்லு அர்ஜுனைச் சந்தித்து லோகேஷ் கதை சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். அல்லுவுக்கும் அந்தக் கதை பிடித்திருக்கிறதாம். எனவே ‘விக்ரம்’ படத்தை முடித்துவிட்டு தெலுங்கு போகிறார் லோகேஷ். ‘புஷ்பா’வை விட பிரமாண்ட தயாரிப்பாக இருக்கும் என்கிறார்கள்.

அந்த இயக்குநர் இரண்டெழுத்து ஹீரோவை வைத்து அடுத்தடுத்து படங்கள் இயக்கி வருகிறார். எல்லாமே அவரும் ஹீரோவும் சேர்ந்து தயாரிக்கும் படங்கள் என்பதால், படத்தில் பங்கு பெறும் நடிகர்களுக்கு முதலிலேயே பேமென்ட் வழங்குவதில்லையாம். படத்தை முடித்துவிட்டு பிசினஸ் ஆகும் போதுதான் சம்பந்தபட்டவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறதாம். “இது ஒரு ஆரோக்கியமான முறை. வட்டிக்கு பணம் வாங்கி சம்பளம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. வட்டி மிச்சமாவதால், படத்திற்கான நஷ்டத்தை தவிர்க்க முடியும்” என அதன் யூனிட்டில் பேசிக்கொள்கிறார்கள்.

நயன்தாரா

இம்மாதம் 2.2.22 தேதியில் நயன்தாராவின் திருமணம் இருக்கலாம் எனக் கிளம்பியது எல்லாம் ‘காத்து வாக்குல காதல்’ படத்திற்கான புரோமோஷனாக போய்விட்டது. காரணம், இந்தியில் நிறைய படங்களில் நடிக்க விரும்புகிறாராம் நயன். அட்லீ இயக்கப்போகும் படத்திற்காக பாலிவுட் பறக்கும் நயன்தாரா, இனி தொடர்ந்து இந்தியில் நடிக்க போகிறாராம். அதற்கான அஸ்திவாரமாக மும்பையில் உள்ள ஸ்டார் காஸ்ட் ஏஜென்சிகள் அத்தனையிலும் பட வாய்ப்புகள் தேடித் தர கேட்டிருக்கிறாராம். தமிழில் ஒரு படத்திற்கு பத்து கோடி வரை சம்பளம் வாங்குபவர், இந்திக்கு போனால் அமௌன்ட் டபுள் ஆகலாம் என்ற கணக்குதான் காரணமாம்.

‘வலிமை’ ரிலிஸுக்குத் தயாராகி விட்டது. நேற்றுதான் அதன் தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட டிரெய்லர்கள் வெளியாகின. இதனையடுத்து இயக்குநர் வினோத் அஜித்தின் அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார். மற்ற இயக்குநர்கள்போல கதையை இவர் ரூம் போட்டு எல்லாம் யோசிப்பது இல்லை. நீண்ட நடை பயணங்களில்தான் யோசிக்கிறார். அதையே செல்போனில் பேசி பதிவு செய்து வருகிறார்.

வலிமை அஜித்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மார்ச்சில் துவங்குகிறதாம். அதற்கான அரங்கம் அமைக்கும் பணிகள் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் பரபரக்கின்றன. இந்தப் படத்தில் இந்தி நடிகை தபு இணைந்திருக்கிறார். நாயகியாக அதிதி ராவ் ஹைதரியை கமிட் செய்யவிருக்கிறார்கள். அதிதி தமிழில் ‘காற்று வெளியிடை’, ‘சைக்கோ’, ‘ஹே சினாமிகா’ ஆகிய படங்களில் நடித்திருப்பவர். தனுஷ் இயக்கி வரும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் அவர் நடித்து வந்தார். ‘அஜித் 61’ல் அதிதியைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜும் நடிக்கிறார். ‘ஆசை’, ‘பரமசிவன்’ படங்களுக்கு பிறகு அஜித்துடன் மீண்டும் இணைகிறார் பிரகாஷ்ராஜ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.