ரேஷன் பொருட்கள் இருப்பு, விலை, புகார் எண்களை அட்டைதாரர்கள் அறியும் வகையில் வைக்க உத்தரவு: உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் நடவடிக்கை

சென்னை: ரேஷன் கடைகளில் வேலைநேரம், பொருட்கள் இருப்பு, அளவு, விலை,புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் ஆகிய வற்றை குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வகையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் வெ.ராஜாராமன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கை: பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் அட்டைதாரர்கள் கவனத்துக்கு, தகவல்கள் அடங்கிய தகவல் பலகைகள் பராமரித்து வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தகவல் பலகைகள் ரேஷன் கடைகளில் சரிவர பராமரிக்கப்படுவதில்லை என தெரிய வருகிறது.

எனவே, அனைத்து ரேஷன் கடைகளிலும், வேலை நேரம், பொருட்களின் ஆரம்ப இருப்பு, விநியோகிக்கப்பட்டது, இறுதி இருப்பு உள்ளிட்ட தினசரி விவரங்கள், பொருட்களின் அளவு மற்றும் விற்பனை விலை, ரேஷன் கடை தொடர்பான புகார் தெரிவிக்க உணவுப்பொருள் வழங்கல் அமைச்சர், துறை செயலாளர், உணவுப்பொருள் வழங்கல் ஆணையர், சென்னை மாவட்ட துணை ஆணையர், மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர், மாவட்டவழங்கல் அலுவலர் உள்ளிட்டோரின் தொலைபேசி எண்கள் அடங்கிய தகவல் பலகை காட்சிப்படுத் தப்பட வேண்டும்.

இந்த நடைமுறைகள் முழுமையாக செயல்படுத்தப்படுவதற்கு தொடர்புடைய மாவட்ட வழங்கல்அலுவலர், துணை ஆணையர் ஆகியார் முழு பொறுப்புடையவர்கள் ஆவர். இந்த சுற்றறிக்கையின் மீதான பணி முன்னேற்றம் குறித்த நிறைவு அறிக்கை மார்ச் 31-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.