மைக்கில் தரக்குறைவாக திட்டிய அமெரிக்க அதிபர் பைடன்: 'கூலாக' கையாண்ட நிருபர்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது முன் இருந்த மைக் செயல்பாட்டில் இருப்பதை உணராமல் செய்தியாளரை தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்த சம்பவம், உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பைடன் பேசியவை இணையத்தில் வெளியாகி வைரல் செய்தியாகியுள்ளது. இந்நிலையில், அதிபர் தன்னை விமர்சித்த விஷயத்தை மிகுந்த நிதானத்துடன் கையாண்டு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார் அந்தப் பத்திரிகை நிருபர்.

— Acyn (@Acyn) January 24, 2022

நடந்தது என்ன? – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்றிரவு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது அந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஃபாக்ஸ் நியூஸ் பத்திரிகையின் செய்தியாளர் பீட்டர் டூஸி, ரஷ்யா விவகாரம் தொடர்பான கேள்வி எழுப்பினார். அப்போது “இன்றைய சந்திப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரம் தவிர வேறு எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கப் போவதில்லை” என்று அதிபர் கூறினார்.

அதற்கு டூஸி, “என்னிடம் 2 பக்கங்களில் கேள்வி உள்ளன; அதை எப்படி புறக்கணிக்கலாம்” என்ற தொனியில் கேட்டதோடு, “பணவீக்கம் அரசியல் பிரச்சினை என நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். பின்னர் அந்த நிருபர் ஏதோ சொல்லிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து செல்ல, மைக் செயல்பாட்டில் இருப்பதை உணராமல், நிருபரை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்தார் அதிபர் ஜோ பைடன். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இது குறித்து நிருபர் பீட்டர் டூஸி பதிலளித்துள்ளார். அவர் சக செய்தியாளர் சீன் ஹானிட்டிக்கு அளித்தப் பேட்டியில், “அதிபர் என்னை எனது செல்ஃபோன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். ‘நான் பேசியதில் தனிப்பட்ட உள்நோக்கம் ஏதுமில்லை’ என்று கூறினார். நான் அதை வரவேற்றேன். என்னிடம் மன்னிப்பு கேட்டாரா எனக் கேட்டீர்கள் என்றால், நான் யாரிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்கவில்லை என்றே சொல்வேன். எங்கள் தொலைபேசி உரையாடல் சுமுகமாகச் சென்றது” என்று கூறினார்.

மேலும் ஹானிட்டி, உங்களை அதிபர் அப்படிப்பட்ட வார்த்தைகளில் விமர்சித்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார், அதற்கு டூஸி “அதிபர் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். அவரை ஏதேனும் பேசவைத்தால் சரி” என்று கூறினார்.

ஃபாக்ஸ் நியூஸ் சேனலில் தி ஃபைவ் (“The Five” ) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற டூஸி, அங்கிருந்த நெறியாளர்களின் கேள்விகளுக்கும் மிகவும் நிதானாமாகப் பதிலளித்து கவனம் ஈர்த்தார்.

அமெரிக்காவில் அண்மைக்காலமாகவே பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வருகிறது. பைடனின் மக்கள் செல்வாக்கும் சரிந்து வருவதாக ஊடகங்கள் அவ்வப்போது கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் பைடன், பத்திரிகையாளர் வெளிப்படை மோதல் உலக அரங்கில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.