ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி, தமிழகம் டெல்லி ஆட்டம் டிரா.!

கவுஹாத்தியில் நடைபெற்ற தமிழகம் டெல்லி அணிகளுக்கிடையிலான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி டிராவில் முடிந்தது.

தமிழகம் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே கடந்த 17-ஆம் தேதி தொடங்கிய நான்கு நாட்கள் கொண்ட ரஞ்சி கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணியின் கேப்டன் விஜய் சங்கர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க வீரர் யாஷ் துல் 113 ரன்களும், லலித் யாதவ் 177 ரன்களும் அடிக்க, முதல் இன்னிங்சில் 452 ரன்கள் குவித்தது. தமிழ்நாடு அணி சார்பில் முகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தமிழக பாபா அபரஜித் 117 ரன்களும், அதிரடியாக ஆடிய ஷாருக் கான் 194 ரன்களும் குவிக்க, தமிழக அணி 494 ரன்கள் குவித்து 42 ரன்கள் முன்னிலை பெற்றது.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணி, தமிழக அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. தொடக்க வீரர்களான யாஷ் துல், துருவ் ஷோரே அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். இந்த ஜோடியை தமிழக வீரர்களால் ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை.

இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 228 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. 

டெல்லி அணி சார்பில் முதல் இன்னிங்சில் சதம் விளாசிய அறிமுக வீரர் யாஷ் துல் இரண்டாவது இன்னிங்சிலும் ஆட்டமிழக்காமல் 113 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான துருவ் ஷோரே 107 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் இன்னிங்சில் முன்னிலைப் பெற்ற தமிழக அணிக்கு 3 புள்ளிகளும், டெல்லி அணிக்கு 1 புள்ளியும் வழங்கப்பட்டது.

புள்ளி பட்டியலில் எலைட் ஹெச் பிரிவில் தமிழக அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.