உ.பி.யில் சோகம்- கள்ளச் சாராயம் குடித்த 9 பேர் உயிரிழப்பு

லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் ஆசம்கரில் மதுபானக்கடையில் விற்பனை செய்யப்பட்ட நாட்டுச் சாராயத்தை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வாங்கி குடித்துள்ளனர். சாராயத்தை குடித்த சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதில், 9 பேர் உயிரிழந்து உள்ளனர். 
பாதிக்கப்பட்ட 41 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்குரிய வகையில் உள்ளது.  சாராயத்தில் கலப்படம் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
கள்ளச்சாராய பலி தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மது விற்பனையில் ஈடுபட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் விஜய் விஷ்வாஸ் பண்ட் கூறி உள்ளார். 
2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. அனுராக் ஆர்யா தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட கடையில் மதுபானம் வாங்கி அருந்திய ஒவ்வொரு நபரையும் கண்டறிந்து, மேலும் உயிரிழப்புகளைத் தவிர்க்க அவர்களுக்கு முறையான சிகிச்சை தொடங்குவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்.  விசாரணைக்குப் பிறகு, இந்த குற்றத்திற்கு காரணமான அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.பி. தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.